/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/468_10.jpg)
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 22ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. ‘பரவா பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாக்கியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் பேசப்படுகிறது.
இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கம் வாயிலாக ’மிஸ் பண்ணக்கூடாத படம்” என குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அமைச்சர் உதயநிதியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த உதயநிதி, “மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அத்திரைப்படக் குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர். ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)