Skip to main content

"ஒவ்வொருவருக்கும் ரசனை மாறும்" - விமர்சனங்களுக்கு இயக்குநர் பதில்

 

Michael movie Director response to criticism

 

லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படம் கடந்த 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டீசர் மற்றும் ட்ரைலர் வரவேற்பை பெற்ற நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனமே இருந்து வருகிறது. 

 

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "உங்கள் கருத்துகளுக்கு எனது அன்பு. எனது எல்லா படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன். 

 

அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும். மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு நன்றி. மாறுபட்ட கருத்து கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துகளையும் மதிக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி ‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.