Skip to main content

“தவறான தகவலை பரப்ப வேண்டாம்” - நடிகை மீனா உருக்கம்

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

meena said Don't spread fake news his husband

 

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். சமீபகாலமாக நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வித்யாசாகரின் உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் சமூக வலைத்தளங்களில் மீனாவின் கணவர் இறப்பு குறித்த பல செய்திகள் பரவி வருகின்றன.

 

இந்நிலையில் நடிகை மீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனது கணவர் வித்யாசாகரை  இழந்ததால் மிகவும் வாடுகிறேன். இந்த நேரத்தில் எனது கணவர் இறப்பு குறித்து யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். இந்த இக்கட்டான சூழலில் எங்களுடைய துயரத்தில் பங்கேற்ற உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், தமிழக முதல்வர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்த மீனா

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
meena condemn about his second marriage rumours

90களில் மற்றும் 2000 தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் வித்யாசாகர் மரணமடைந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தையுடன் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் மீனா. இதனிடையே மீனா இரண்டாம் திருமணம் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தது. அதை திட்டவட்டமாக மறுத்திருந்தார் மீனா. 

இந்த நிலையில், தனது இரண்டாவது திருமண வதந்திகள் குறித்துப் பேசிய மீனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், “இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகள் தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் வருத்தத்திற்கு ஆழ்த்தியது. தகவல்களை சரி பார்க்காமல் அதை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். தனது வாழ்க்கை தற்போது திருப்திகரமாக இருக்கிறது” என்றார். 

மேலும், “சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொன்னால் தான் நல்லது. எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இப்போது இல்லை. அது பற்றி வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்'' என்று கூறியுள்ளார். மீனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். மலையாளத்தில் ஒரு படமும் தமிழில் ஒரு படமும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.