Skip to main content

“வசனம் பேசி கைத்தட்டல் வாங்கும் விஷயம் இல்லை” - விஷாலுக்கு மேயர் பதிலடி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

mayor priya replied vishal allegation for cyclonemichaung chennai flood

 

மிக்ஜாம் புயல், சென்னையை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்து மக்கள் கொஞ்சமாக கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விஷால், சென்னை மாநகராட்சியையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. வாக்காளர் என்ற முறையில் ஒரு சின்ன வேண்டுகோள். சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரி செய்தால் நல்லாருக்கும்” என பேசியிருந்தார். 

 

விஷாலின் விமர்சனத்திற்கு சென்னை மேயர் பிரியா பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்! படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

செம்பரம்பாக்கம் ஏரியைக்கூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம். 

 

பல ஆண்டுகளில் வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால்தான் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது. திமுக பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது. பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்