இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. இதுவரை 7 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் பேசப்படுகிறது.
இந்த சூழலில் படத்திற்கு அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து குணா குகை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், குணா குகை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு. 1821 ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த அதிகாரி பி.எஸ். வார்ட் குணா குகையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. பின்பு குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்...’ என்கிற பாடல் உள்பட சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. பின்பு 1991 ஆம் ஆண்டு குணா படம் வெளியானதை தொடர்ந்து, அந்த பாடல் ஹிட்டடிக்க அந்த குகை சுற்றுலா தலமாகவே மாறியது. மேலும் குணா குகை என்றே அந்த குகைக்கு பெயரிடப்பட்டது. இன்றளவும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னால் வெள்ளைக்காரர்களால் சாத்தான்களின் சமையலறை (Devils Kitchen) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 13க்கும் மேற்பட்டோர் அந்த குகையில் உள்ள குழியில் விழுந்து காணாமல் போயுள்ளனர். ஆனால் யாருமே மீட்கப்படவில்லை.
இதையடுத்து 2000 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அந்த பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் 2006 ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் இளைஞர்கள் குணா குகையை பார்வையிடும் போது, அனுமதி மறுக்கப்பட்ட அந்த ‘சாத்தான்களின் சமையலறை’ குகைக்குள் சென்றுள்ளனர். அப்படி செல்லும்போது, சுபாஷ் (25) என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக ஒரு குழியில் விழுந்துள்ளார். அவரை மீட்க அப்பகுதிக்குட்பட்ட காவல்துறையினர் உள்ளிட்ட குழுவினர் முயற்சி செய்கின்றனர். விழுந்தவரை காப்பாற்ற அந்த நண்பர்கள் குழுவில் இருந்த சசி என்பவரே இறக்கப்படுகிறார். 5 மணி நேரத்திற்குப் பிறகு சுபாஷை மயங்கிய நிலையில் மீட்டு விடுகிறார். அந்த அபாயகரமான குகையில் விழுந்து மீட்கப்பட்ட முதல் நபராக சுபாஷ் இருந்துள்ளார். மேலும் சசியின் துணிச்சலை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் அந்த குகையில் இருந்த மீட்கப்பட்ட முதல் நபர் என்ற சாதனையை அந்த இளைஞர்கள் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தால் மீண்டும் குணா குகை பற்றிய தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த குணா குகை 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. ஆனால், உண்மையான குணா குகைக்கு செல்லும் பாதை மூடப்பட்டு அதன் மேற்பரப்பு மட்டுமே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது.