தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான எம்.சரவணன், புதிதாக இயக்கி வரும் படம் 'நாடு'. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாகவும் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். சிங்கம் புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப் பணிகளை சத்யா மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பத்திரிகையாளர்களைப் படக்குழு சந்தித்துள்ளது.
அப்போது இயக்குநர் சரவணன் பேசுகையில், "இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையைப் பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்குச் சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதைப் பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதிலிருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதையை உருவாக்கினேன்” என்று கூறினார்.
நடிகை மகிமா நம்பியார் பேசுகையில், "இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்துக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன் அதனால் எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக அழகாக மேக்கப் செய்துகொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம்... இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வைத்து விடுவார். இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து பயந்து தான் வேலை பார்த்தேன். படத்தில் என்னை விட தர்ஷன் - இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்ப நிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்" என்றார்.