Skip to main content

“உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை”-மத ரீதியான கேள்வி... பதிலளித்த மாதவன்

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

நேற்று நடிகர் மாதவன் தனது குடும்பத்தினருடன் சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவரது வீட்டின் பூஜை அறையில் இந்து கடவுள்களின் புகைப்படங்களுடன் சிலுவையும் இருந்தது. அதை குறி வைத்து ஒருவர் மத ரீதியாக கேள்வி எழுப்பியிருந்தார். 
 

madhavan

 

 

இதற்கு நடிகர் மாதவன் பெரிய பதிலுடன் தக்க பதிலடியை ட்விட்டரில் கொடுத்துள்ளார். மாதவனிடம், “பின்னணியில் ஏன் சிலுவை இருக்கப் போகிறது. அது என்ன கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்துக் கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம்” என்று அந்த பெண் கேள்வி எழுப்பினார்.
 

இதற்கு பதிலளித்த மாதவன், “உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் எnறு நம்புகிறேன். உங்களுடைய நோய்க்கு எதிரே அங்கிருந்த பொற்கோவிலை பார்த்துவிட்டு நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேனா என கேட்காமல் போனது ஆச்சரியம் அளிக்கிறது.
 

நான் தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறேன். ஏன் உலகின் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறேன். அத்தகைய தலங்களில் இருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்தன, சிலவற்றை நானே வாங்கினேன். எனது வீட்டில் எல்லா மத நம்பிக்கையைச் சேர்ந்தவர்களும் வேலை பார்க்கின்றனர். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபடுகிறோம். அனைத்துப் படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர்.
 

எனது பால்ய பருவத்திலிருந்தே எனக்கு இது சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றுவார் என்று நம்புகிறேன். நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறேன்.
 

நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படித் திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துபட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்றுக் கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும்” என்று பதிவிட்டுள்ளார். 
 

தற்போது மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நாரயணன் நம்பியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்ட ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்