Skip to main content

“உங்களால் முடியும் முதல்வரே! அடித்து ஆடுங்கள்”- கவிஞர் தாமரை வாழ்த்து

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

தமிழ் வழியில் மட்டுமே கல்வி பயின்றவர்களுக்கு அரசாங்க வேலையில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை மசோதா தாக்கல் செய்தது. இந்த சட்ட திருத்தத்தை அமைச்சர் டி. ஜெயக்குமார் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 

thamarai

 

 

இதை பாராட்டி கவிஞர் தாமரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு!

தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும். தமிழ் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முதன்மையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எந்த மொழிச்சிக்கலும் இல்லா வண்ணம் நடத்தப்படுவதே சிறந்த மக்களாட்சி.

இது சிலருக்குக் கசப்பாக இருக்கக் கூடும். 'தமிழ்நாட்டில் தமிழ்' என்றுதானே கேட்கிறோம்? ஆந்திராவில் தமிழ், கர்நாடகத்தில் தமிழ், கேரளத்தில், ம.பி, உ.பி, பஞ்சாப், ஹரியானாவில் ஆட்சிமொழி தமிழென்றா கேட்கிறோம்? அப்புறம் ஏன் கசக்க வேண்டும்?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே! நம் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, யாரையும் வாழ வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என அறிக! நம் மொழிப்பற்றை, மொழி வெறியாகத் திரித்தால் அது திரிப்பவர்களின் பிரச்னை, நம் பிரச்சினையில்லை!

பி.கு: அப்படியே இந்த வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமான நிலையம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழை, தமிழரை உறுதிப்படுத்துக! தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும்/அடையும் அனைத்து வானூர்திகளிலும் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும்.

உங்களால் முடியும் முதல்வரே! அடித்து ஆடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்