Skip to main content

சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி! கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன?

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

rw

 

கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமாகக் கூட்டத்துடன் பணி நடைபெறும் சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் முதலமைச்சருக்கு, சமூக விலகலைப் பின்பற்றி ஷூட்டிங் நடைபெற முதலமைச்சர் அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இன்று இந்தக் கோரிக்கையை ஏற்று, சின்னத்திரைக்கு மட்டும் சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடைபெற முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் படக்குழு கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின் வருமாறு... 
 

 

*சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.

 

*பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. எனினும் ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.

 

*பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

 

*படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

 

*படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். நடிகர் நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

 

*படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 

*படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். அதேபோன்று படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
 


*சளி இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்பப் பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பவேண்டும்.

 

*அதிகபட்சமாக நடிகர் நடிகை தொழில்நுட்பப் பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

 

*சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.

 

*மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

படப்பிடிப்பிற்கு வருகைதரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதை, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துகொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது'' என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும்” - த்ரிஷாவிற்கு ஆதரவாக ஃபெப்சி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
fefsi about trisha admk member issue

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சேரன், “வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலையும், பொருளாளர் கார்த்தியையும் டேக் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் ஃபெப்சி இந்த விவகாரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜீ என்பவர் திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளைக் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளைத் திரையுலகப் பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக முர்மு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ‘பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்’ நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

‘டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்’ - தயாரிப்பாளர் சங்கம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
tamil film active producers association demand Ticket prices should be reduced

சிறு பட்ஜெட் படங்களை பொதுமக்கள் திரையரங்கு வந்து பார்ப்பதை இலகுவாக்க, டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு திரையரங்கு, மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் ஆகிய நிர்வாகிகளுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 

இது தொடர்பாகத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவைக் கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். குறிப்பாக சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை பெரும்பாலான பார்வையாளர்கள் திரையரங்குகளில் பார்த்து நல்ல வசூல் தரும் போக்கு குறைந்து வருவது அனைவருக்கும் கவலை தருகிறது. விதிவிலக்காக சில சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு மட்டும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. ஆனால் அவ்வாறு எப்போதாவது வரும் வெற்றி நம் இரு தரப்பினருக்கும் போதாது.

சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பு இதை மனதில் வைத்து நாம் இரு சங்கங்களும் சேர்ந்து சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது. நல்ல திரைப்படங்களை, சரியான விளம்பரங்களுடன் கொடுப்பது தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றால், திரையரங்கில் அத்தகைய படங்களைப் பார்ப்பது அதிகம் செலவாகிற விஷயம் என்று மக்களிடம் உள்ள பொதுவான ஒரு எண்ணத்தை உடைப்பது திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்பு. சென்னையில் ரீ-ரிலீஸ் என்ற முறையில் சில முக்கிய படங்களை திரையரங்கில், குறைந்த டிக்கெட் கட்டணத்தில் வெளியிட்டு கமலா திரையரங்கம் நல்ல சாதனைகளைப் புரிந்துள்ளது. குறைந்த டிக்கெட் கட்டணங்கள் பார்வையாளர்களைக் கவர்கின்றன என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இதை முன்னுதாரணமாக வைத்து சிறு பட்ஜெட் படங்களை பொதுமக்கள் திரையரங்கு வந்து பார்ப்பதை இலகுவாக்க, டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைத்து பிப்ரவரி 23 முதல் வெளியாகும் படங்களுக்கு தாங்கள் வசூலிக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த ஒரு மாற்றம், மக்கள் மத்தியில் மீண்டும் திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட வாய்ப்பு உள்ளது” என குறிப்பிட்டு ஒரு அட்டவணையை வகுத்துள்ளது. அந்த பட்டியலை மேற்கோள் காட்டி, “அந்த டிக்கெட் கட்டணங்களை விட அரசு அனுமதித்துள்ள டிக்கெட் கட்டணங்களை தான் வசூலிக்க வேண்டும். குறைத்து வசூலிக்க வேண்டாம் என்று எந்த தயாரிப்பாளராவது (சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர் உட்பட) கடிதம் கொடுத்தால், அதை திரையரங்குகள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு கடிதம் எதுவும் தராத பட்சத்தில், இங்கே பரிந்துரைத்துள்ள குறைந்த டிக்கெட் கட்டணங்களைத் தான் அனைத்து தரப்பு படங்களுக்கும் திரையரங்குகள் வசூலிக்க வேண்டும். 

தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இணைந்து டிக்கெட் கட்டணங்களை குறைத்து உள்ளார்கள் என்ற செய்தி ஊடங்களில் பரவும்போது, அது பொதுமக்களிடையே நல்ல ஒரு எண்ணத்தை உண்டாக்கும். அதன் மூலம், திரையரங்குகளுக்கு மக்கள் வரும் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட எங்களின் இந்த பரிந்துரையை ஏற்று ஒரு முடிவெடுத்து எங்களுக்கு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம். வரவிருக்கும் பொதுத் தேர்தல் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல சிறு பட்ஜெட் படங்கள் தான் வெளியாக வாய்ப்பு உள்ளது. மே மாதம் முதல் தான் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும். இந்த சூழ்நிலையில், நாம் டிக்கெட் கட்டணங்களை குறைத்துள்ளோம் என்ற நல்ல செய்தியை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வைக்க வேண்டும். எங்களின் இந்த திட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.