Skip to main content

"நீண்ட நாள் ஆசை, வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி" - நடிகை குஷ்பு நெகிழ்ச்சி !

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

kushboo talk about meera serial

 

90 களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜக செய்தி தொடர்பாளராக இருந்து வரும் குஷ்பு இடையில் சினிமா தொடர்களிலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை குஷ்பு 'மீரா' என்ற நெடுந்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீரா தொடரில் நடிப்பது மட்டுமின்றி , இத்தொடருக்கான கதையையும் குஷ்புவே எழுதியுள்ளார். இத்தொடரின் முதன்மை கதாபாத்திரங்களான மீரா கதாபாத்திரத்தில் குஷ்புவும், கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் சுரேஷ் சந்திர மேனனும் நடித்துள்ளனர். கடந்த 27 ஆம் தேதியில் இருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை ஜவஹர் இயக்கி வருகிறார்.

 

இத்தொடர் குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், "இத்தொடர் மூலம் ஒரு முழு நேர எழுத்தாளராகவும் மற்றும் கருத்துருவாக்கம் செய்வதிலும் நான் பெருமை கொள்கிறேன். எனது கனவு செயல்திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறது.  உறுதியான, சுதந்திரமான மற்றும் சுயசார்புள்ள ஒரு பெண்ணைச் சுற்றிய ஒரு கதையை தமிழ் தொலைக்காட்சி தளத்தில் சொல்ல வேண்டுமென்பது, நான் நீண்டகாலமாக விரும்பிய ஒரு விஷயம்.  மீரா நெடுந்தொடரில் இதை செய்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த கதாபாத்திரத்தோடு பார்வையாளர்கள் தங்களை தொடர்புபடுத்திப் பார்த்து உத்வேகம் பெறுவார்கள் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரண்மனை 4’ - ரிலீஸ் அப்டேட் சொன்ன குஷ்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sundar c aranmanai 4 release update

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அப்போது கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை, அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில், அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்த மாதமான ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் புது போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.