விட்டல் மூவிஸ் தயாரிப்பில் 'காக்கா முட்டை' சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ், வருணிகா, சஞ்சனா, இமான் அண்ணாச்சி, சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'புது வேதம்'. மேலும் 2 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராசா விக்ரம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரபி தேவேந்திரன் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு திருமாவளவன் எம்.பியும் கலந்துகொண்டு பேசினார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், "இந்த விழாவுக்கு நெல்லை சுந்தர்ராஜன் செய்த தொல்லையால்தான் வந்தேன். இங்கு வந்தது நல்லாதாகிவிட்டது. எனது பழைய நண்பர்கள், இயக்குநர் வி.சேகர் போன்றவர்களை சந்திக்க முடிந்தது. பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் நடித்த வேதம் புதிது படத்துக்கு இசையமைத்தவர் தேவேந்திரன். இன்றைக்கு அவரது மகன் புது வேதம் படத்தில் பாடல் இசையமைத்திருக்கிறார். திருமாவளவன் இந்த படத்தை பார்த்திருக்கிறார் என்றால் அடித்தட்டு மக்களுக்கான நியாயத்தை பேசும் படமாகத்தான் இது இருக்கும் என்று கருதுகிறேன். இப்படம் ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துகள்" என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பேசுகையில், "புது வேதம் படத்தை இயக்குநர் ராசா விக்ரம் எனக்கு திரையிட்டுக் காட்டினார். முழுமையாகப் பார்த்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும்போது, ‘எல்லோரும் இப்போது சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று படம் எடுக்கிறார்கள்’ என்ற வருத்தத்தை சொன்னார். அப்படிப்பட்ட இந்த திரையுலகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்துடன் படம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
ராசா விக்ரம் போன்று சாதி வேண்டாம், மதம் வேண்டாம், எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிப்போம் என புரட்சிகரமான முற்போக்கான சிந்தனையாளர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது; ஆறுதல் அளிக்கிறது. இந்த இயக்குநரின் பார்வை இடதுசாரி பார்வையாக இருக்கிறது. முற்போக்கு பார்வையாக இருக்கிறது. ஜனநாயக; சமத்துவப் பார்வையாக இருக்கிறது. எளிய மக்களை உற்று நோக்குகிற ஒரு பார்வையாக இருக்கிறது.
ஒருபுறம் சாதிப்பெருமை பேசுபவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறவர்களாக இருந்தாலும் ஐயன் திருவள்ளுவர், அவ்வைப்பிராட்டி, புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு நாம் சிந்திக்கிறோம். மனித குலத்தை தாண்டி பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் அதுதான் கருணை. அதைத்தான் வள்ளலார் தனிப்பெருங்கருணை என்றார். எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு என்ற ஆன்ம நேயத்தைப் போதித்தவர் வள்ளலார்.
காலம் நமக்கு அவ்வப்போது வள்ளலார்களை தந்து கொண்டேயிருக்கும். திரைத்துறையில் எத்தனை சாதிவெறியர்கள் வந்தாலும் மதவெறியர்கள் வந்தாலும் எப்படி படம் எடுத்தாலும் சமூகத்தை எப்படி பாழ்படுத்த நினைத்தாலும் அதெல்லாம் எதிர்கொள்கிற சிந்தனையாளர்களை இந்த சமூகம் தந்துகொண்டே இருக்கும். அந்த காலத்தில் வள்ளலார் கிடைத்தார். இந்த காலத்தில் தந்தை பெரியார் கிடைத்தார், அம்பேத்கர் கிடைத்தார். அவர்கள் தந்த கொள்கைகள் நம்மை வழிநடத்துகின்றன என்பதற்கு சான்றாக இயக்குநர் ராசா விக்ரம் இருக்கிறார்" என்றார்.