இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடித்துள்ள படம் ‘ஹிட்லிஸ்ட்’. சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் என இருவர் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் சரத்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் நக்கீரன் ஸ்டூடியோஸ் யூடிப் தளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர்.
இதில் கே.எஸ் ரவிக்குமார், ரஜினியை வைத்து தொடங்கப்பட்டு பின்பு கைவிடப்பட்ட ராணா படம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில், “அந்தப் படம் கனவாகவே போய்விட்டது. தசாவதாரத்திற்கு அடுத்ததாக ராணா படம் இருக்க வேண்டும் என நானும் எந்திரனுக்கு அடுத்ததாக இந்தப் படம் இருக்க வேண்டும் என ரஜினி சாரும் பேசினோம். ஆரம்பத்தில் அனிமேஷனாக எடுக்க திட்டமிட்டோம். அப்புறம் படத்தில் சில லைவ் போர்ஷனுக்காக சில சீன்கள் எழுதினேன். அதை கேட்ட ரஜினி சார், இதுவே நல்லாயிருக்கு, அனிமேஷன் வேண்டாம் லைவ் ஷூட்டிங்கே போலாம் எனச் சொன்னார். படத்திற்காக ப்ரீ புரடக்ஷன் வேலைகளெல்லாம் ஆரம்பித்து பூஜை போட்டோம். உடனே தீபிகா படுகோனேவை வைத்து ஒரு பாடலையும் எடுத்துவிட்டோம். அந்தச் சமயத்தில்தான் ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அந்த இடைவெளியில் டெக்னீஷியன்கள் எல்லாம் போய்விட்டனர். ஆனால் நான் அப்படியேதான் இருந்தேன். நானும் படத்தை விட்டு போயிருந்தால், கேவலமாக பேசியிருப்பார்கள்.
அப்போது உண்மையாகவே ஒரு விஜய் படம் வந்தது. சில சின்ன பட்ஜெட் படங்களும் வந்தது. அதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு ரஜினிக்கு காத்திருந்தேன். சிங்கப்பூரிலிருந்து ரஜினி வந்ததும், ஒரு வருஷத்துக்கு ரஜினி மெனக்கெட கூடாது என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். அதனால் மெனக்கெடல் இல்லாமல், திரும்பி அனிமேஷனுக்கே போய்விடலாம் என முடிவெடுத்தோம். எனக்கு அனிமேஷன் தெரியாது. அப்போது ராணாவுக்கு முன் கதை இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்து எழுதின கதைதான் கோச்சடையான். ராணாவுக்கு அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்து கோச்சடையான் எழுதினோம். ரஜினியிடம் கதை சொன்ன போது சில மாற்றங்கள் சொன்னார். பின்பு லண்டனில் ஸ்டூடியோவுக்குள் ஷூட் பண்ணோம். எனக்கு அனிமேஷன் தெரியாது என்பதால், அனிமேஷனுக்கு படிச்ச சௌந்தர்யா பண்ணட்டும் என்றேன். அதுவும் நடந்தது. அதனால் கதை, திரைக்கதை, வசனம் மட்டும் எழுதினேன். ஆனால் இன்னமும் ராணா கதை, முதல் பாதி, இரண்டாம் பாதி அடங்கிய மொத்த ஸ்கிரிப்ட் என்னுடைய அலுவலகத்தில் இருக்கிறது. எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம். ரஜினி, அஜித் போல இமேஜ் கொண்ட ஹீரோதான் அதற்கு பொருத்தமாக இருக்கும். விஜய் இனிமேல் படம் பண்ணுவாரென தெரியவில்லை. அதனால் பெரிய இமேஜ் கொண்ட ஹீரோ நடித்தால்தான் எடுபடும்” என்றார்.