Skip to main content

பாஜகவில் இணைகிறேனா? - கிச்சா சுதீப் விளக்கம்

 

Kiccha Sudeep will campaign for BJP in karnataka 2023 cm election

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சி அமைக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியுள்ளார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

இந்த தேர்தலையொட்டி, பிரபல நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் கிச்சா சுதீப். இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான் கட்சியில் இணையவில்லை. பிரச்சாரம் மட்டுமே செய்யவுள்ளேன். எனக்கும் முதல்வருக்கும் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. என் வாழ்க்கையில் பல உதவிகளை அவர் செய்துள்ளார். அவருக்காக மட்டுமே நான் இதை செய்கிறேன். கட்சிக்காக அல்ல. அவர் நலனுக்காக பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யவுள்ளேன்" என்றார்.  

 

கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் என இந்திய அளவில் அறியப்படும் ஹீரோவாக இருப்பவர் கிச்சா சுதீப். தமிழில் விஜய்யின் 'புலி' படத்தில் வில்லனாகவும் 'முடிஞ்சா இவன புடி' படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவ்வப்போது அரசியல் குறித்து கருத்தும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு "இந்தி இனி தேசிய மொழி அல்ல" எனப் பதிவிட்டார். 

 

கடந்த பிப்ரவரி மாதம், கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சுதீப் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சில காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. பாஜகவுக்கு எதிராக கருத்து கூறியும் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் கிச்சா சுதீப் நெருக்கம் காட்டி வந்துள்ளார். மேலும், கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.