Skip to main content

“பெரியார் விருது வழங்க முடிவெடுத்திருந்தோம்... ஆனால்..." - மாரிமுத்து குறித்து தி.க. தலைவர் கி. வீரமணி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

kee.veeramani about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

 

அவரது உடலுக்கு இயக்குநர் வசந்த், சரத்குமார். எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி மற்றும் அவர் நடித்து வந்த சீரியல் நடிகர்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்பு செய்தியாளர்களிடம் மாரிமுத்துவுடன் பணியாற்றியதை கண்ணீர் மல்கத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்பு பேசிய அவர், "பிரபல இயக்குநரும் சிறந்த பகுத்தறிவாளரும் அதேபோல உயர்ந்த நடிகருமாக, எல்லாவற்றையும் தாண்டிய ஒரு தன்னம்பிக்கை மிகுந்தவரானவர். ஒரு தனித்துவமான உழைப்பால் உயர்ந்த ஒரு பெருமகனான தோழர் மாரிமுத்துவின் இழப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடன் பழகியதில்லை. அதே நேரத்தில் அவருடைய கருத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. அவரது குடும்பத்துக்கு மட்டும் பேரிழப்பு இல்லை. மேலும் கலையுலகத்திற்கும் அதையும் தாண்டி பகுத்தறிவு உலகத்துக்கும் பேரிழப்பு. 

 

காரணம் என்னவென்றால், இப்படிப்பட்ட அற்புதமான நடிகர், இயக்குநர், உழைப்பால் உயர்ந்தவர். அப்படிப்பட்ட அவர் எப்படி தன்னம்பிக்கையோடு இருக்கிறார் என்பதற்கு அவருடைய தெளிவான கொள்கைகள் பார்க்கும்போது தெரிகிறது. அவருடைய பேட்டியை சில நாட்கள் முன்பு பார்த்தேன். பின்பு அவரின் நடிப்பையும் பார்த்தேன். அதிகமாக சீரியலில் நடிப்பவர்களை பார்ப்பதற்கு பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கிடைக்காது. அதே நேரத்தில் அவருடைய கொள்கையை அடிப்படையாக கொண்டும் அவர் பேட்டிகளை பார்க்கிறபொழுது அவரை பெரியார் திடலுக்கு அழைத்து, வருகிற பொங்கல் நேரத்தில் அவருக்கு பெரியார் விருது வழங்க முடிவெடுத்திருந்தோம். ஆனால் இப்போது இயற்கை அவரை பறித்துவிட்டது. அவர் போன்று ஒருவர் கலையுலகத்திற்கும், பகுத்தறிவு இயக்கத்திற்கும் மீண்டும் கிடைப்பாரா என நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. அவருக்கு எங்கள் வீர வணக்கம்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்றே எழுதி வைத்துவிடலாம்; அந்தக் கதிதான் அதிமுகவுக்கு' - கி.வீரமணி விமர்சனம்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14 ஆம் தேதி (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிடை இழந்தது. தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன்? இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992-இல் பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியதும் அதிமுக தான்'' எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.

இந்நிலையில் பாஜகவிற்கு உதவுவதற்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பதாக திராவிடர் கழகம் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்திருப்பது என்பது மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதே ஆகும். இது அதிமுக கட்சியின் பலகீனத்துக்கான அறிகுறியே. அரசியல் கட்சியின் கடமையை நிறைவேற்றுவதில் இருந்து அதிமுக பின்வாங்குவது உள்நோக்கம் கொண்ட செயலாக இருக்கிறது. தேர்தல் புறக்கணிப்பால் அதிமுகவின் பொதுமதிப்பு காணாமல் போய்விடும். இது அக்கட்சிக்கான தோல்வி அச்சத்தை காட்டுகிறது. தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்கள், வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருப்பதாக கூறப்படும் பொதுமதிப்பு இழக்கும் நிலை உருவாகும்.

 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

தேர்தலில் நிற்பதில்லை என்ற முடிவுக்கு அதிமுக சொல்லும் காரணங்கள் பொது அறிவு பொருத்தமானதாக இல்லை. ஆம்புலன்ஸை பணம் கடத்த பயன்படுத்தியவர்கள் அதிமுகவினர் என்பதை நாடறியும். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்து இருந்தாலும் பிரச்சாரத்தில் மோடியை அதிமுக தலைவர்கள் விமர்சிக்கவில்லை. மராட்டியத்தில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட கதிதான் அதிமுகவிற்கும் ஏற்படும் என்பதை இன்றே எழுதி வைத்துவிடலாம். பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாமக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பாமக மீது தமிழ்நாட்டு மக்களின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும்? பாமகவின் எந்தப் பிரச்சாரமும் இனி எடுபடாது. விக்கிரவாண்டி தேர்தலில் திமுக ஆட்சியின் மக்கள் வளர்ச்சி திட்டங்கள் அமோக வெற்றியைப் பெற்று தரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'திமுக ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது'-கி.வீரமணி வாழ்த்து

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
'During DMK rule, people's hearts are filled with happiness' - K. Veeramani wishes

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து  4 ஆவது ஆண்டில் இன்று (07.05.2024) அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “வணக்கம். மக்களின் நம்பிக்கையையும், நல் ஆதரவையும் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன்.  3 ஆண்டுகள் நிறைவடைந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7.  இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்ன என்று தினம் தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வதுதான் உண்மையான பாராட்டு. 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

'During DMK rule, people's hearts are filled with happiness' - K. Veeramani wishes

திமுகவின் கூட்டணி மற்றும் தோழமை கட்சிகள் திமுக அரசு நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தன்னுடைய வாழ்த்துச் செய்தியை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. பல்வேறு செயல் திட்டங்களால் திமுக அரசு தனது சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்து 74,757 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் மூன்று ஆண்டுகளாக படைத்து வரும் சாதனைகள் தமிழ்நாட்டு மக்களால் பாராட்டப்படுகின்றன. முதல்வரின் திட்டங்களை அறிந்து வியந்து மற்ற மாநிலங்களும் அதை செயல்படுத்திட ஆர்வம் காட்டி வருகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.