/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/79_15.jpg)
கடந்த 1972ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘காசேதான் கடவுளடா’ என்ற படம், தற்போது சமகாலத்திற்கு ஏற்ப ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இப்படத்தை ஆர். கண்ணன் தயாரித்து இயக்குகிறார். அவருடன் எம்.கே.ஆர்.பி. நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு ஆகியோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் ஊர்வசி, கருணாகரன், ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி மற்றும் புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். என். கண்ணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிய படக்குழு, ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தி 35 நாட்களிலேயே மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது.
படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆர். கண்ணன் இப்படம் குறித்து கூறுகையில், "எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன். ஆனால் ‘காசேதான் கடவுளடா’ முற்றிலும் வேறானது. அனைவரும் முடங்கியிருந்த பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். இவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும்தான் காரணம். அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்தான் இது சாத்தியமானது. விரைவில் படத்தின் விஷுவல் ப்ரோமோவுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் திரை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரைவில் வெளியிடவுள்ளோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)