Skip to main content

“மன்னிப்பு கேட்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம்” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தர்ஷன்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
kannada actor dharshan women organization issue

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தர்ஷன். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் கர்நாடகா ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடந்த நிகழ்ச்சியில், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் தர்ஷன் பேசியுள்ளதாக கவுடாதியர சேனே என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் காதலி என சொல்லப்படும் பவித்ரா கவுடா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சிலர் பேசி வந்த நிலையில், அதற்கும் விளக்கமளிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த புகார் மனுவில் கவுடாதியர சேனே அமைப்பு குறிப்பிட்டிருப்பதாவது, “தர்ஷன் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். திரையில் எந்தளவிற்கு நல்லவராக இருக்கிறாரோ அதையே நடைமுறைப்படுத்த வேண்டும். ரசிகர்களிடம் பகிரங்கமாக பேசும்போது இதுபோன்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்தினார். அதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும். மேலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கும் தெரியும். நடிகர் தனது தவறை அறிந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அவர் அதை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் நாங்கள் மகளிர் ஆணையத்தை அணுக முடிவு செய்தோம். இதை அவர் ஏற்கவில்லை என்றால் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 

Next Story

கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கர்நாடக அரசு; எம்.என்.சி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Action order for MNC companies and Karnataka Government giving priority to Kannadas

சமீபத்தில் பெங்களூரில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், பெங்களூரில் உள்ள கன்னட மொழி இல்லாத பெயர்ப் பலகை கொண்ட வணிக நிறுவனங்களைக் குறிவைத்து கன்னட ஆதரவு அமைப்பினர் வன்முறை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வணிக நிறுவனங்களில் கன்னட மொழி உள்ள பெயர்ப் பலகையை வைக்க வேண்டும் என்ற அவசர சட்டத்தைக் கர்நாடகா அரசு கொண்டு வந்தது.

இதனிடையே, கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடம் தவிர பிறமொழி பேசுபவர்கள் தான், அதிகமாக வேலைக்கு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், கர்நாடகா இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் எத்தனை கன்னடர்கள் பணிபுரிகிறார்கள் என்ற விவரத்தை அந்த நிறுவனங்களின் வரவேற்பு அறையில் காட்சி பலகையாக வைக்கும்படி கர்நாடகா அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கர்நாடக சட்டப்பேரவையில் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளின் பெயர்ப் பலகைகளில் 60 சதவீதம் கட்டாயம் கன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கர்நாடக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்காணிக்கும் வகையில், கர்நாடகா அரசு புதிய உத்தரவைக் கொண்டு வந்துள்ளது. அதில் கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் கன்னட ஊழியர்களின் எண்ணிக்கையை அந்தந்த நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு இணங்கத் தவறினால், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும். கன்னடர்கள் மற்றும் கன்னட மொழியின் நலனுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து ‘கன்னட காவல்’ என்ற செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம்” என்று கூறினார்.