Skip to main content

“இளையராஜாவை சுருக்கி விட்டார்கள்” - கமல்ஹாசன் ஆதங்கம்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

kamalhaasan talk about album song and ilaiyaraaja

 

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ‘ஓ பெண்ணே..’ என்ற ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவரே பாடியும், நடித்தும் இருக்கிறார். இப்பாடல் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பாடலை வெளியிட்டார். 

 

அதன் பிறகு பேசிய கமல்ஹாசன், “தேவி ஸ்ரீ பிரசாத் பல வெற்றிகளை கொடுத்த பிறகும், அதை எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், சின்ன பையன் போல ஒவ்வொரு முறையும் புதிது போல செயல்பட்டு வருகிறார். எம்.எஸ்.வியை சந்தித்து வந்த பிறகு சந்தோஷமாக, பதட்டமில்லாமல் இருக்கும். அதேபோன்று, இளையராஜாவை பார்க்க சென்றால் சத்தமாக பேசலாமா, வேண்டாமா என்று பயமாக இருக்கும். ஆனால் அவர் கொடுக்கும் இசைக்கு நாம் பேசாம இருந்து, கொடுக்கும் இசையை வாங்கி கொண்டு வந்தாலும் சந்தோஷமாகதான் இருக்கும்.

 

இவர் எப்படியோ, அப்படித்தான் நானும் இளையராஜாவுக்கும் மிகப்பெரிய ரசிகன். தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று பார்த்தால், அது அவருடைய ஸ்டுடியோவா இல்லை இளையராஜாவின் ஸ்டுடியோவா என்று சந்தேகமாக இருக்கும். ஏனென்றால் தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் பெரிய புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார். அப்படி நல்ல கலைஞர்களை பார்த்து காதல், மோகம் எல்லாம்  தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உண்டு. அதை வெளிப்படுத்துவது தான் எங்கள் கடமை. அவருக்கு வெற்றி விரைவாக வந்திருக்க வேண்டும். எனக்கு என்னவோ தாமதமாக வந்திருக்கிறது என்று நீண்ட காலமாகவே ஒரு கோபம் இருகிறது. ஏனென்றால் ‘தசாவதாரம்’ படத்தில் இவரின் பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கும்.

 

தேவி ஸ்ரீபிரசாத் எடுத்துள்ள இந்த முயற்சி எவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் சினிமாவை விட இசை ஆல்பம் பாடல்(தனிப்பாடல்) தான் பிரபலமாகி இருந்தன. ஆனால் சினிமா வந்த பிறகு அது அனைத்தையும் விழுங்கி விட்டது. அதன் பிறகு படத்தின் கதை என்னவோ, அதற்கு மட்டுமே படம் எடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளார்கள். இசைக்கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அப்படி ஒரு சூழ்நிலையில் சினிமாவில் அமையவில்லை என வருத்தமாக இருக்கிறது. இளையராஜா மாதிரி பெரிய கலைஞர் கூட சிறிய சதுரத்தில் சுருக்கி விட்டார்கள். அதையும் தாண்டி வெளியே சென்று இசையமைத்தால் வேண்டாம், எங்களுக்கு புரியவில்லை என்று சொல்வார்கள். அதனால் அவர்களுக்காக இசை கலைஞர்கள் குனிந்து நிற்கிறார்கள். அதை எல்லாம் களைந்துவிட்டு, அவர்களை அவர்களின் போக்கில் விட வேண்டும். 

 

இன்றைக்கு அமெரிக்காவில் பார்த்தீர்கள் என்றால் சினிமா நட்சத்திரங்களை விட இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் தான் பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள். தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் எனது மகள் சுருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது,  உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா, அதனால் இங்கு சினிமா கற்றுக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவில் இசையையும் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். சினிமாவை விட பெரிதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று சொல்லி இசையை கற்க அனுப்பி வைத்தேன். சினிமாவை போல, இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” - இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ilaiayaraaja copyright case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள்,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள். 

Next Story

உத்தம வில்லன் நஷ்டம்...திருப்பதி பிரதர்ஸ் கண்டன அறிக்கை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Thirrupathi brothers about uttama villain issue

கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர், போஜ குமார், ஆன்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்  இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களைப் பரப்புவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான், கமலஹாசனை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான  உத்தம வில்லன், எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது கமலஹாசனுக்கும் நன்றாகவே தெரியும். 

உத்தம வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசனும் அவரது சகோதரர் அமரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான யூட்யூப் சேனல் ஒன்று உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.