Skip to main content

“எதற்கும் அஞ்சாத துணிச்சல் விஜயகாந்த்தின் அடையாளமாக இருந்தது” - கமல்ஹாசன்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
kamalhaasan about vijayakanth

தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்(71) கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த 11 ஆம் தேதி வீடுதிரும்பிய அவர் நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தார்.  

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே அவரது மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்” என கூறிப்பிட்டுள்ளார். 

மாரி செல்வராஜ், “அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன்” என பதிவிட்டுள்ளார். மேலும் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, த்ரிஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியன் 2 - பக்கா பிளானில் படக்குழு 

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
indian 2 audio launch update

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்பு படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பேர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டு பாக படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் தேதி, குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஜூன் 13 வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மே 16ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மே முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் பரவலாக பேசப்படுகிறது. இதையடுத்து பாடல்கள் வெளியீட்டிற்கு பின்பு ட்ரைலர் மற்றும் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

Next Story

பிரம்மாண்ட பட்ஜெட் -  ஒரே மாதத்தில் வெளியாகும் கமலின் இரண்டு படங்கள் 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து பிரபாஸின் கதாபாத்திர போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அவர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அண்மையில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து  டீசர் வெளியிட்டிருந்தனர். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால் இப்படம் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. 

kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

இந்த நிலையில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜுன் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புது ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 படம், கல்கி  2898 ஏடி வெளியாகவுள்ள அதே மாதத்தில் வெளியாகவுள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் ஒரே மாதத்தில் கமலின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 2 மற்றும்  கல்கி 2898 ஏடி இரு படங்களும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.