Skip to main content

"சரோஜாதேவியை அடிக்கிறியா, இல்ல நான் உன்னை அடிக்கட்டுமான்னு கேட்டார் இயக்குநர்" - கலைஞானம் பகிரும் சுவாரசிய நினைவுகள்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

kalaignanam speech about sarojadevi acting in shooting spot

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு கால அனுபவங்களைக் கொண்ட இவர் நமது நக்கீரன் ஸ்டுடியோவில் ஒளிபரப்பாகும் பொக்கிஷம் என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரைத்துறையில் நடந்த சுவாரசியமான  நிகழ்வுகள் குறித்துப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரம்  எஸ்.ஏ. நடராஜன் குறித்தும் தன் திரை வாழ்வில் நடந்தது  குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு.

 

கடந்த 1950 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான "மந்திரி குமாரி" படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஏ. நடராஜன் நடித்திருந்தார். இப்படத்தில் எம்.ஜிஆர்-ஐயும் தாண்டி இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தில் எஸ்.ஏ நடராஜன் பாடிய "வாராய் நீ வாராய்.." என்ற பாடல் அந்தக்கால ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "நல்ல தங்கை" என்ற படத்தைத் தயாரித்தார். இதில் எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்திற்குப் பாடல் எழுதித் தரச்சொல்லி பாடலாசிரியர் காமாட்சி வீட்டிற்கு வந்தார் எஸ்.ஏ நடராஜன். அப்போது காமாட்சி பாடல் வரிகளைச் சொல்லச் சொல்ல நான் தான் எழுதிக் கொடுப்பேன். அதன் பின்புதான் எனக்கும் எஸ்.ஏ. நடராஜனுக்கு நட்பு தொடங்கியது. அதனையடுத்து "நல்ல தங்கை" படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

 

எஸ்.ஏ நடராஜன் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் படங்களைத் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் நான் தங்கி இருந்த வீட்டை காலி செய்ய வேண்டிய நிலைமை வந்தது. அந்த நேரத்தில் தான் எஸ்.ஏ. நடராஜன் தயாரிக்கும் படத்தின் போஸ்ட்டரை பார்த்தேன். அப்போது எனக்கு ஒரு யோசனை வந்தது. எஸ்.ஏ. நடராஜன் நன்கு பரிச்சயமானவர், அவரை நேரில் சந்தித்தால் சினிமாத்துறையில் ஏதாவது நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன். அதனால் என் அண்ணனிடம் நான் எஸ்.ஏ. நடராஜனை சந்திக்க மைசூர் செல்கிறேன். எனக்கு சாப்பாட்டுக்குப் பணம் எல்லாம் வேண்டாம், இங்கிருந்து மைசூர் செல்வதற்கு ரயில் டிக்கெட்டிற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றேன், இதைக் கேட்ட அவர் நீ மைசூர் போனவுடன் உனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து விடுவாரா என ஏளனமாகச் சிரித்துக்கொண்டே சாப்பாட்டுக்கு என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஹோட்டலில் டேபிள் கழுவிப் பிழைத்துக் கொள்வேன் எனக்  கூறிவிட்டு  அவரிடம் ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை வாங்கிக்கொண்டு மைசூர் வந்தடைந்தேன்.

 

அதன் பின் எனக்கு தெரிந்த காமெடி நடிகர் காக்கா ராதா கிருஷ்ணன் மூலம் மைசூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில்  எஸ்.ஏ. நடராஜன் அவர்களைச் சந்தித்தேன். என்னைப் பார்த்த எஸ்.ஏ நடராஜன் "வாயா பாலகிருஷ்ணா" என்றார்.  "அண்ணே, எனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்க" என்று கேட்டேன். அதற்கு என்ன, பத்து பேர் இருக்கும் இடத்தில் நீயும் ஒருவனாக இருந்துட்டு போ என்றார். மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும், அங்கு ஏதாவது வேடம் கொடுப்பார்கள் அதைச் செய்ய வேண்டும்.

 

இந்த நிலையில் தான் எஸ்.ஏ. நடராஜன் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் "கோகிலவாணி" என்ற படத்தை இயக்கினார். ரகுவரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாகவும் எஸ்.ஏ. நடராஜனே நடித்திருந்தார். இதில் எனக்கு திருடன், போலீஸ், குருடன் உள்ளிட்ட 7 வேடம் கொடுத்தார்கள். இதனைத்தொடர்ந்து கன்னட மொழியில் எடுக்கப்பட்ட கோகிலவாணி படத்தில் கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். அப்போது ஒரு காதல் காட்சியில்  கதாநாயகனும், கதாநாயகியும் புல்வெளியில் படித்திருப்பார்கள். அவர்களை நான் குச்சியால் அடிக்கும் படியான காட்சி படமாக்கப்பட்டது. அதில் நான் படத்தின் கதாநாயகியான சரோஜாதேவியை  குச்சியால் அடித்தேன், உடனே கட் கட் என்று சத்தம் வந்தது, யார் என்று பார்த்தால் எஸ்.ஏ. நடராஜன்,  "வேகமாக அடித்தால் தான் அவள் உணர்வுப் பூர்வமாக கத்துவா, ஓங்கி அடிக்கச் சொன்னா, செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்தவன் மாதிரி அடிக்கிற, அவளுக்கு வலிக்கிற மாதிரி அடிக்கிற, இல்ல உன்ன அடிக்கிற அடியில் நீ மெட்ராஸ் பக்கம் ஓடி போய்டுவ" என்றார். சரி இவரே ஒரு முரடன் நாம ஒழுங்கா அடிக்கவில்லை என்றால் இவர் நம்மை அடித்து விடுவார் என்று நான் சரோஜாதேவியை வேகமாக அடித்தேன். அப்போது அவர் வலி தாங்க முடியாமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை விட்டு வெளியே ஓடிவிட்டார். பின்னர் அவரை சமாதானம் செய்தோம், அதன் பிறகு அந்தம்மாவின் முகத்தை மெட்ராஸில் தான் பார்த்தேன் என்றார் 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.