Skip to main content

சரோஜா தேவியின் அம்மா கொடுத்த சாபம்... வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட இயக்குநர்!

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் எஸ்.ஏ. நடராஜனுக்கு சரோஜா தேவியின் அம்மா கொடுத்த சாபம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

கன்னட மொழியில் எடுக்கப்பட்ட கோகிலவாணி படத்தின் படப்பிடிப்பில் நடிகை சரோஜா தேவியை ஓங்கி அடித்தது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அந்தப் படம் வெளியானபோது தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலுமே தோல்வியைத் தழுவியது. நாங்கள் அனைவரும் மைசூரில் ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தோம். படம் தோல்வி என்றவுடன் சொல்லிக்கொள்ளாமல் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தார்கள். நான் மதுரை வந்து எங்கள் ஊர் எழுமலைக்கு 36 மைல் செல்ல வேண்டும். இரண்டு மொழிகளிலுமே படம் தோல்வியடைந்ததால் எஸ்.ஏ. நடராஜன் கடனாளியாகிவிட்டார். யாரிடம் பேசினாலும் எரிந்து எரிந்து விழுந்தார். அதனால்தான் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்துவிட்டனர். நான் அவரிடம் சென்று இங்கிருந்து மதுரைக்கு ஏதாவது லாரி சென்றால் சொல்லுங்கள். நான் அதில் ஏறி ஊருக்கு போகிறேன் என்றேன். கோயம்புத்தூரில் உள்ள பைனான்சியர் வீட்டிற்கு என்னுடைய கார் போகிறது. அதில் ஏறி போ... என்றார். நான் மைசூரில் இருந்து அந்தக் காரில் கோயம்புத்தூர் வந்தடைந்தேன். பின், அங்கிருந்து எங்கள் ஊருக்கு சொல்லும் ஒரு லாரியில் ஏறி எழுமலை வந்து சேர்ந்தேன். 

 

இதற்கிடையே கோகிலவாணி படம் தோல்வியடைந்த விவரம் என் சொந்தபந்தம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. நான் கதாசிரியர் மற்றும் நடிகரானதற்கு என்னுடைய உடன்பிறந்த அண்ணன்தான் காரணம். என் அப்பா ஏழு வயதிலேயே இறந்துவிட்டார். அண்ணன்தான் என்னை உருவாக்கினார். நான் மைசூரில் இருந்து திரும்பிவந்தபோது அவரும் என்னிடம் கோபித்துக்கொண்டார். நீ நடிக்கிற எல்லா படமும் தோல்வியடைகிறது. இந்தப் படத்திலாவது நல்லா வருவன்னு நினச்சு உன்ன மைசூருக்கு ட்ரைன் ஏத்திவிட்டேன். இப்ப இதுவும் தோல்வியடைந்துவிட்டது. இந்தத் தொழில விட்டுட்டு வேற எதாவது வேலையைப் பாருடான்னு சொல்லிவிட்டார். என் தங்கச்சி, அவர் கணவர் என யாருமே என்னிடம் பேசவில்லை. வீட்டுல சோறும் போடவில்லை. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. தனியாக உட்கார்ந்து அழுக ஆரம்பித்துவிட்டேன். அப்படியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து என் அண்ணன் மட்டும் வந்து என்னிடம் பேசினார். நீ என்னதான் செய்யப்போறடா என்றார். என்னை மெட்ராஸுக்கு அனுப்பு... அங்க போய் நான் எப்படியாச்சும் பொழச்சுக்குறேன் என நான் கூற, இப்படித்தானடா மைசூர் போகும்போதும் சொன்ன என்றார் அவர். ஒரு வழியாக அவரிடம் பேசி சம்மதம் வாங்கினேன். ரயில் டிக்கெட்டிற்கான காசும் அதுபோக இரண்டு ரூபாயும் கொடுத்து என்னை சென்னை அனுப்பி வைத்தார். 

 

சென்னையில் எனக்கு தெரிந்த ஒரே ஆள் காமாட்சி அண்ணன்தான். அவரும் இப்போது இறந்துவிட்டார். அந்த நேரத்தில் இரண்டு படங்களில் மட்டும் துணை நடிகராக நடித்திருந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி தி.நகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் கோகிலவாணி படத்தின் ப்ரொடக்ஷன் மேனஜர் ராகவனை பார்த்தேன். அவனைப் பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. பின், அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஊரில் நடந்த அனைத்தையும் விளக்கி கூறினேன். எனக்கு என்ன செய்யன்னு தெரியல... இனி எங்கையாவது போய் சாகவேண்டியதுதான் என்று கொஞ்சம் எமோஷனலாக சொன்னேன். நீ ஏன் சாகப்போற... உனக்கு என்ன தொழில் தெரியும் என ராகவன் கேட்டான். என்னிடம் டிரைவிங் லைசன்ஸ் இருக்கும் விஷயத்தை நான் கூறியதும் எஸ்.ஏ. நடராஜனிடம் என்னை கார் டிரைவராக சேர்த்துவிடுவதாக கூறினான். அந்த நேரத்தில் மிகுந்த கடனில் இருந்த எஸ்.ஏ. நடராஜன், சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க ஒரு கார் டிரைவரை தேடிக்கொண்டு இருந்தார். 

 

எஸ்.ஏ. நடராஜனை சந்திப்பதற்காக ராகவன் என்னை ஓல்ட் வுட்லேண்ட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து  எஸ்.ஏ. நடராஜன் அந்த ஓட்டலில் தங்கியிருந்தார். அவர் அறைக்குள் யாருடனோ பேசிக்கொண்டிருந்ததால் என்னை வெளியே நிறுத்திவிட்டு ராகவன் மட்டும் உள்ளே சென்றான். நான் நீண்ட நேரமாக வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது சரோஜா தேவி அவர் அம்மாவுடன் அங்கு வந்தார். கோகிலவாணி படத்தில் நடிக்க சரோஜா தேவிக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசியிருந்தார்கள். ஆனால், அவருக்கு நூறு ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. படம் தோல்வியடைந்து எஸ்.ஏ. நடராஜன் கடனாளியாகிவிட்டதால் எஞ்சிய தொகையை அவரால் கொடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் சரோஜா தேவி குடும்பமும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தது. நாடோடி மன்னன் மாதிரியான படங்களுக்கு பிறகுதான் சரோஜா தேவி குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்தது. சம்பள பாக்கியை கேட்க வந்தவர், முதலில் ராகவனை அழைத்து பேசினார். ராகவன் எஸ்.ஏ. நடராஜனின் தற்போதைய நிலை பற்றி கூறினான். அதற்கு சரோஜா தேவியின் அம்மா, சிறிதளவு பணமாவது வாங்கித்தாருங்கள்... செலவுக்கு பணமே இல்லை. சரோஜா தேவிக்கு இரண்டு படங்களில் வாய்ப்பு கிடைப்பதுபோல உள்ளது. அப்படி வாய்ப்பு கிடைத்தால் உங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கூட கொடுத்துவிடுகிறேன் என்றார். உடனே, ராகவன் உள்ளே சென்று எஸ்.ஏ. நடராஜனிடம் விவரத்தைக் கூறினார்.

 

கடுப்பான எஸ்.ஏ. நடராஜன் வெளியே வந்து, ஏம்மா உனக்கு அறிவு இருக்கா... நாங்க ரெண்டு படத்துல நஷ்டமடைஞ்சு லட்சணக்கான பணத்தை இழந்துட்டு நிக்கிறோம். இப்ப வந்து சம்பளம் கேட்குற... எனக் கத்தினார். உன் பொண்ணு நடிச்சதுனாலதான் என் படம் ஓடல என்று ஒரு வார்த்தை அவர் கூடுதலாகக் கூற, சரோஜா தேவியின் அம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது. நீ படம் எடுத்தா எவன்யா பார்ப்பான்... அதான் படம் ஓடல என்று பதிலுக்கு அந்த அம்மா கூற, இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றிவிட்டது. கடைசியாகப் போகும்போது, நடிச்சவங்க வயித்துல அடிச்சிட்டீல நிச்சயமா இனிமேல் நீ படமே எடுக்க முடியாது என மண்ணை வாறி தூற்றிவிட்டுச் சென்றார். அந்த அம்மா சொன்ன வார்த்தை அப்படியே பலித்தது. அதன் பிறகு  படம் எடுக்க முடியாமல் மிகவும் வறுமையான நிலைக்கு வந்துவிட்டார் எஸ்.ஏ. நடராஜன். 

 

சரோஜா தேவி அம்மாவிற்கும் எஸ்.ஏ. நடராஜனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை நான் ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் சென்றதும், என்னை எஸ்.ஏ. நடராஜனிடம் ராகவன் அறிமுகப்படுத்தினான். கார் நான் ஓட்டிக்கிடுவேன்... நீ வண்டிய கழுவுனா மட்டும் போதும். சம்பளம் கிடையாது... மூனு வேலை வீட்டுல சாப்டுக்கலாம்... சம்மதமா என்றார். நான் சரி எனக் கூறி அவரிடம் வேலைக்கு சேர்ந்துவிட்டேன். அவரிடம் வேலை பார்த்துக்கொண்டே பட வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன்.