Skip to main content

‘எம்.ஜி.ஆர் இல்லனா சிவாஜிகிட்ட போகவேண்டியதுதான்’ எனக் கூறிய தயாரிப்பாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த தண்டனை!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தன் படம் ஓடாது எனக் கூறிய தயாரிப்பாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த தண்டனை பற்றி அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

எஸ்.ஏ. நடராஜனிடம் கார் டிரைவராக நான் வேலைக்கு சேர்ந்தது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். சம்பளம் வாங்காமல் அவர் வீட்டில் மூன்று வேளை சாப்பிட்டுக்கொண்டு அவரிடம் வேலை பார்த்தேன். அங்கு வேலை பார்த்துக்கொண்டே படத்தில் நடிக்க வாய்ப்பும் தேடினேன். ஒரு கட்டத்திற்கு மேல் அவரிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை. எஸ்.ஏ. நடராஜன் மிகுந்த வறுமையில் இருந்தார். அந்த கஷ்டத்திற்கு மத்தியிலும் அவரது மனைவி என்னை உடன்பிறந்த ஒரு சகோதரர் போல பார்த்துக்கொண்டார். சாப்பாட்டிற்கு எந்தக் குறையும் வைக்கமாட்டார். அவர்களுடைய வீட்டில் ஒரு மாதம் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் எஸ்.ஏ. நடராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. 'என்னடா நினைச்சுட்டே... நான் யாருன்னு தெரியுமுல...' என்று ஒரு முறை குரலை உயர்த்திப்பேசி கை ஓங்கிவிட்டார். என்னதான் இருந்தாலும் அவர்கள் வீடு எனக்கு சோறு போட்ட இடம். அவர்கள் மனசு கஷ்டப்படும்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று நினைத்து நான் வேலையைவிட்டு நின்றுவிட்டேன்.

 

அங்கிருந்து வந்து அம்பாள் டாக்கீஸ் என்ற கம்பெனியில் டிரைவர் வேலைக்கு சேர்ந்தேன். தியாகராஜ பாகவதர் நடித்த அசோக் குமார் படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான சுந்தர் ராமையா, இப்போது தனியாக படம் எடுக்க வந்தார். பாதி படம் நடித்திருக்கையிலேயே எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் ஆரம்பித்துவிட்டார். அதனால் கலையரசி, இன்பக்கனவு, மதிவாணன் என மூன்று தயாரிப்பாளர்களையும் சில காலம் காத்திருக்கச் சொல்லிவிட்டார். நான் அந்தப் படத்தை முடித்துவிட்டு உங்கள் படத்திற்கு வருகிறேன். அந்தப் படம் நல்லபடியாக ஓடினால் உங்கள் படத்தை நீங்கள் நல்ல விலைக்கு விற்கலாமே என்று எம்.ஜி.ஆர் கூறியதால் அவர்களும் சரி என்றனர். கிட்டத்தட்ட இதில் ஓராண்டுகள் கடந்து விட்டன. நான் சுந்தர் ராமையாவிற்கு தேவைப்படும் நேரங்களில் கார் ஓட்டிக்கொண்டு, மற்ற நேரங்களில் புத்தகம் படித்துக்கொண்டு இருப்பேன். 

 

ஒருநாள், அந்த மூன்று தயாரிப்பாளர்களும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், 'எம்.ஜி.ஆர் எடுக்கும் படம் ஓடினால் நம் படத்தை நல்ல விலைக்கு விற்கலாம். ஒருவேளை படம் ஓடவில்லை என்றால்....?' என்று ஒருவர் கேட்க, சிவாஜி கணேசனிடம் போகவேண்டியதுதான் என்று எங்கள் தயாரிப்பாளர் கூறிவிட்டார். இந்த விஷயம் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி காதுக்கு சென்றுவிட்டது. சக்கரபாணி எம்.ஜி.ஆரிடம் அதை அப்படியே கூறிவிட்டார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே பெரிய போட்டி இருந்தது. சக்கரபாணி கூறியதை அமைதியாக கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

 

நாடோடி மன்னன் படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு, கால்ஷீட்டிற்காக மூன்று தயாரிப்பாளர்களும் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றனர். எங்கள் தயாரிப்பாளரை மட்டும் தனியாக உட்காரச் சொல்லிவிட்டார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் சம்பளம் 75,000 ரூபாய். ஒன்றரை லட்சம் கொடுத்தால்தான் அவர் படத்தில் நான் நடிப்பேன் என்று கூறிவிடுங்கள் என சக்கரபாணியிடம் கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். 'ஒரு காலத்தில் அவர் தயாரித்த அசோக் குமார் படத்தில் ஒரு சீனில் நடித்தோமே என்ற நன்றியோடு அவருக்கு படம் நடித்துக்கொடுக்க முன்வந்தால், நான் எடுக்கும் படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது என்று ரோட்டில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார். இது  நல்லா இல்லை' என்றார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். ஒரு லட்சம் கேட்பதாக சுந்தர் ராமையாவிடம் வந்து சக்கரபாணி கூறினார். சக்கரபாணி ஒன்றரை லட்சம் சம்பளம் வேண்டும் என்று கூறியதைக் கேட்டு சுந்தர் ராமையா அதிர்ச்சியடைந்துவிட்டார். அந்தக் காலத்தில் 75 ஆயிரம் என்பதே அதிகமான சம்பளம். அவ்வளவு சம்பளம் தர தன்னால் இயலாது எனக் கூறிய சுந்தர் ராமையா, 85 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறினார். கடைசியில் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என எம்.ஜி.ஆர் கூறிவிட்டார்.

 

வேறுவழியில்லாமல் அந்தக் கதையில் டி.ஆர்.மகாலிங்கத்தை நடிக்க வைத்தோம். அப்படி உருவான படம்தான் மாலையிட்ட மங்கை. அந்தப் படத்தின்போதுதான் எஸ்.ஜானகி பாடுவதற்கு வாய்ப்பு கேட்டுவந்தார். ஜானகி பாடுவதைக் கேட்டு டி.ஆர்.மகாலிங்கம் பிரமித்துவிட்டார். அந்தப் படத்தில் பாட அவருக்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.