Skip to main content

"வீட்டு ஓனர் கே.பி.சுந்தராம்பாள் போட்ட வினோதமான கண்டிஷன்" - கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்!

Published on 02/06/2021 | Edited on 02/06/2021

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கே.பி.சுந்தராம்பாள் வீட்டு மாடியில் தன்னுடைய திரைப்பட தயாரிப்பு அலுவலகத்தை அமைத்த மலரும் நினைவுகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

ஒரு கட்டத்தில் சாண்டோ சின்னப்பத்தேவர் என்னை தனியாகப் படம் தயாரிக்க அறிவுறுத்தினார். அந்த படத்திற்கு அவரே பைனாஸ் செய்வதாகவும் கூறினார். முதலில், நடிகர் ரஜினியை வைத்து 'பைரவி' படத்தை எடுத்தேன். அதன் பிறகு, 'செல்லக்கிளி' எடுத்தேன். அப்படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. அடுத்ததாக 'புதிய தோரணங்கள்' என ஒரு பேய்ப்படம் எடுக்கத் திட்டமிட்டேன். ஊரிலுள்ள ஆட்கள்   சேர்ந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிடுகின்றனர். அந்தப் பெண் வளர்த்த குதிரையினுள், பெண்ணின் ஆவி புகுந்து ஊரையே அழிப்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில்தான் நடிகை மாதவியை அறிமுகம் செய்தேன். சரத் பாபு கதாநாயகனாக நடித்தார். பேச்சிலர் பசங்க தங்கும் அளவிலான ஒரு சிறிய வீட்டில்தான் முதல் இருபடங்களுக்கான ஆபிஸ் போட்டிருந்தேன். மூன்றாவது படத்தின்போது பொருட்கள் நிறைய சேர்ந்துவிட்டதால் இடநெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இடத்தை மாற்றலாம் என முடிவெடுத்து ஒரு தரகரை அழைத்து அவரிடம் விஷயத்தைக் கூறினேன். அவரும் வீடு பார்ப்பதாகக் கூறினார்.

 

சினிமாவிற்கு ஆபிஸ் போட என்றால் யாரும் வீடு தரமாட்டார்கள். ஏன், சினிமாக்காரனுக்கு குடியிருக்கவே வீடு தரமாட்டார்கள். இன்னும் அந்த நிலை இருக்கிறது. நட்சத்திர அந்தஸ்து வரும்போதுதான் எளிதில் வீடு கிடைக்கும். தரகர்கள்தான் நாம் யாரென்று, என்னென்ன படங்கள் எடுத்துள்ளோம் என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துக்கூறுவார்கள். அந்த நேரத்தில் ரஜினியை வைத்து படமெடுத்துள்ளேன் என்றுகூறி ரஜினி பெயரைச் சொல்லியெல்லாம் வீடு கேட்க முடியாது. அவரே அப்போதுதான் அறிமுகமாகி நடித்துக்கொண்டிருக்கிறார். நான் அனுப்பிய தரகர், 'பராசக்தி படத்தில் பூசாரியாக நடித்தாரே கே.பி.காமாட்சி சுந்தரம் அவருடைய தம்பிதான்... படமெடுக்கிறார்; அவருக்குத்தான் வீடு' என என்னைப்பற்றி கூறி கே.பி.சுந்தராம்பாள் அவர்களிடம் வீடு கேட்டுள்ளார். அவரது வீட்டு மாடி காலியாக இருப்பதாகவும் தனக்கும் பாதுகாப்பான ஆளாக இருக்கும்படி யாரவது இருந்தால் கூறுங்கள் எனவும் அந்தத் தரகரிடம் கே.பி.சுந்தராம்பாளும் முன்னரே கூறியிருக்கிறார். என்னைப் பற்றி கூறியதும், "சரி நாளைக்கு நேரில் வரச் சொல்லுங்கள்" எனத் தரகரிடம் கூறிவிட்டார் கே.பி.சுந்தராம்பாள். 

 

மறுநாள் நான் நேரில் சென்றேன். அம்மா வணக்கம் என்றேன். வீட்டை பூட்டுக்கொண்டு சங்கிலி கதவின் வழியாகத்தான் என்னிடம் பேசினார். யார் வந்தாலும் இப்படித்தான் அவர் பேசுவார். என்னிடம் என்ன படம் எடுக்கப்போற என்று கேட்க, நான் பேய்க்கதை என்றேன். பேய்கதையா என சில நொடிகள் யோசித்தார். "உன்னைப் பார்த்தா நெற்றியில் குங்குமமெல்லாம் வைத்து பெரிய பக்திமான் மாதிரி  தெரியுது; அதுனால உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு; உனக்கு வீடு வாடகைக்கு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்; நீ நாளைக்கு காலைல வா" என்றார். எனக்கு ரொம்ப சந்தோசம். மறுநாள் காலை சென்றேன். உனக்கு நான் வீடு கொடுக்குறேன்; ஆனால், ஒரு  கண்டிஷன் என்றார். என்னடா புதுசா ஏதோ கண்டிஷன் என்றெல்லாம் சொல்லுதேனு எனக்கு ஒரே குழப்பம். "வாடகை அதிகமாக வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கமாட்டேன். எனக்கு குடும்ப பிரச்சனை உள்ளது. என்னுடைய சொந்த ஊரிலுள்ள தாய்மாமன் குடும்பத்தினரால் எனக்கு எதாவது ஆபத்து நேர்ந்துவிடும் என்று கருதித்தான் எப்போதும் கதவை மூடி வைத்துள்ளேன். இந்த வீட்டிற்கும் மாடிக்கும் ஒரு பெல் கனெக்ஷன் உள்ளது. எனக்கு ஏதாவது தப்பு நடப்பதுபோலத் தெரிந்தால் பெல் அடிப்பேன். உடனே நீ ஓடி வரவேண்டும். அந்த உதவி எனக்கு நீ செய்வீயா" என்றார். சரி செய்கிறேன் என்றேன். பின்பு என் குடும்பத்தைப் பற்றி கேட்டார். மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற விஷயத்தைச் சொன்னதும் இன்னொரு கண்டிஷன் சொன்னார். என்னால் சமைக்க முடியவில்லை. அதனால், தினமும் மதியம் மட்டும் எனக்கு உங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கொடுங்கள். என்னால் வேலைக்காரி யாரையும் வேலைக்கு வைக்க முடியவில்லை. ரொம்ப பயமாக இருக்கிறது. இந்த இரு உதவிகள் மட்டும் செய்; வாடகை குறைவாகக் கொடுத்தால் போதும் என்றார். என் மனைவியும் அதற்கு சம்மதிவிட்டதால் அந்த வீட்டிலேயே ஆபிஸ் போட்டேன். எனக்கு அம்மா கிடையாது. கடைசிவரை கே.பி.சுந்தராம்பாள் ஒரு தாய்போலத்தான் எனக்கு இருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்