Skip to main content

“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. பிரமாண்டமான வகையில் செட் அமைக்கப்பட இருந்ததால் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.
 

kajal agarwal

 

 

இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேலும் இந்த விபத்தில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என்ற மூவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில், "என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், எனக்குத் தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அன்பு. தனிமையான இந்தத் தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும்.

நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜூன் மாதத்தை குறிவைத்த கமல்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kamal shankar indian 2 release update

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்பு படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பேர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டு பாக படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

kamal shankar indian 2 release update

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புது போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

கமல்ஹாசன், இப்படத்தை தவிர்த்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். மேலும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' மற்றும் அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் ஒரு படம், கைவசம் வைத்துள்ளார். ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார்.     

Next Story

‘தி.மு.க. கூட்டணியில் இணைந்தது ஏன்?’ - கமல்ஹாசன் விளக்கம்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Why joined to the DMK alliance KamalHaasan explained

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரியின் 1 ஒரு மக்களவை தொகுதி உட்பட 10  தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. அதே சமயம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு நிமிடம் 11 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கூட்டணி நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு கை கூடி விடக்கூடாது என்பதற்கான முடிவு இது. இந்த அரசியலை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்திருக்கிறது சரித்திரம். எந்த கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்த நேரத்தில் அனைவருமே என்னுடைய சகோதரர்கள் தான். தேசத்திற்காக நாமெல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் என்னுடைய அரசியல்” எனத் தெரிவித்துள்ளார்.