k bhagyaraj explained police statement

இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 12 ஆம் தேதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் செல்லும் மக்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தொடக்கத்தில் ஆற்றில் உள்ள சுழலில் மாட்டிக் கொள்வார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு உடலை மீட்டுத் தருவார்.

நாளடைவில் தான் தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவன் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. தண்ணீருக்குள் இறங்குபவர்களை பின்தொடர்ந்து, திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்..” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்பு பாக்கியராஜ் கூறிய விஷயங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என கூறியிருந்தார். மேலும் அந்த நீண்ட அறிக்கையில், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச்செயல் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் காவல் துறை அறிக்கைக்கு பதில் தெரிவித்து பாக்கியராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “போலீஸுக்கு எப்போதுமே தப்பு நடக்கும் போது தெரியாது. அதுக்கப்புறம் தான் அவுங்க கண்டுபிடிப்பாங்க. அந்த சம்பவத்தில் போலீஸை எந்த விதத்திலும் சம்மந்தப்படுத்தவில்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பதற்காகத் தான். ஆனால் இதை சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவோடு தொடர்பு படுத்திவிட்டார்கள்.

Advertisment

அவரது கார் விபத்து ஆன பின்பு அவரது உடல் தேடப்பட்டு வந்தது. உடலைத்தேடி கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்கள். அந்த பரிசுத்தொகையால் இந்த செய்தி பரபரப்பாகி விட்டது. அதனால் இரண்டு சம்பவத்தையும் தொடர்புபடுத்தி அனைவரிடத்திலும் கருத்து கேட்கத் தொடங்கிவிட்டனர். அது போலீஸ் வரை போய்விட்டது. அவர்கள் வதந்தி என சொல்லிவிட்டனர். அதற்கு விளக்கம் கேட்டு என்னிடம் நிறைய பேர் கேட்கின்றனர். காவல் துறையினரின் கவனக் குறைவு, அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என எதையும் நான் சொல்லவில்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பது மட்டுமே. காவல் துறையை நான் சம்மந்தப்படுத்தி பேசவில்லை. ஆனால், இப்போது திருப்பி நான் விசாரித்த போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்தது" என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.