Skip to main content

‘அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும்’- ஜோதிகா கேள்வி

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து, ஜோதிகா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘ராட்சசி’. புதுமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது தன் மீது வந்த விமர்சணத்திற்கு பதிலளித்தார் ஜோதிகா.
 

jyothika

 

 

“ட்விட்டரில் சிலர் பெண் சமுத்திரக்கனி, சாட்டை படம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இந்தப் படத்தில் அதே அரசாங்கப் பள்ளிகள் தொடர்பான கருத்து இருக்கலாம். ஆனால், படம் அப்படியில்லை. 100 படங்கள் இதே போன்று வந்தாலும் கூட, இது சமூகத்துக்கு தேவை தான். பெரிய பட்ஜெட் படங்களில் கூட ஒரே கதையை வேறொரு பார்வையில் சொல்கிறார்கள். அதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை. நாயகன் வருவார், 2-3 நாயகிகளை காதலிப்பார், இடைவேளை, எமோஷன், க்ளைமாக்ஸ் என இருக்கும். அதைப் பற்றி யாருமே பேசுவதே இல்லை. அதை விட்டுவிட்டு இந்தப் படம் மட்டும் ஏன் பள்ளிக்கூடம், சாட்டை மாதிரி இருக்கிறது என சொல்வது ஏன் என தெரியவில்லை.
 

அகரம் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள். அதில் சுமார் 35% மாணவர்களிடம் பேசும் போது, அவர்களது வகுப்பறைக்கு ஒரு வருடமளவுக்கு ஆசிரியர்களே வரவில்லை. ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரசாங்க பள்ளியில் படித்தவர்கள் தான். ஆகவே, இதே மாதிரியான கருத்துகள் 100 படத்தில் வந்தால் கூட நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம். இந்தப் படத்தில் நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் மேடம் தான் படப்பிடிப்பில் என் துணை. ஒரு எமோஷன் காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ளோம். அவர் ஒரு அற்புதமான நடிகை. இதர நாயகிகளுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையவில்லை. பெண்ணோடு ஒரு காட்சியில் நடித்தால், அதன் அனுபவமே புதுமையாக இருக்கும். இப்படத்தில் என்னோடு நடித்த டீச்சர்கள் அனைவருக்குமே நன்றி. அவர்கள் ரொம்ப எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதற்கு ஈடுகொடுத்து நடிப்பதே கடினமாக இருந்தது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்