Skip to main content

“படத் தலைப்பு இவருக்காகவே உருவானது போல் இருக்கிறது” - ஜெயம் ரவி

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
jeyam ravi speech at double tuckkerr audio launch

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் 'டபுள் டக்கர்'. கோடை விடுமுறையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜெயம் ரவி பேசுகையில், “எனக்கு இருக்கும் மிகச் சில நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ். அவருக்காக இங்கு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.

'டபுள் டக்கர்' எனும் தலைப்பு இவருக்காகவே உருவானது போல் இருக்கிறது, ஏனென்றால் மருத்துவர், நடிகர் என்று இரண்டு பரிமாணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தீரஜ். வித்யாசாகர் அவர்களின் இசைக்கு சிறு வயது முதல் இருந்து ரசிகன் நான். அவர் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இளைஞர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார். அவரது இசை இந்த படத்திற்கு கட்டாயம் பெரிய பக்கபலமாக இருக்கும்." என்றார்.

வித்யாசாகர் பேசியதாவது, “டபுள் டக்கர் படத்தின் நாயகன் தீரஜ்ஜை ஒரு சிறுவனாக தெரியும், பின்னர் மருத்துவராக தெரியும். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் திரைப்படங்களில் நடிப்பதாகவும் 'டபுள் டக்கர்' திரைப்படத்திற்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் இயக்குநர் மீரா மஹதி இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்