Skip to main content

பாலிவுட்டில் தெறிக்கவிட்டாரா அட்லீ? - ‘ஜவான்’ விமர்சனம்!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

jawaan movie review

 

பாலச்சந்தர் தொடங்கி பிரபுதேவா வரை தமிழிலிருந்து ஹிந்திக்கு சென்ற இயக்குநர்கள் அங்கும் வெற்றிக்கொடி நாட்டி இருக்கின்றனர். தமிழ் இயக்குநர்களின் துடிப்பும், திரைக்கதை யுக்தியும் ஹிந்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தற்பொழுது அதே வரவேற்பைப் பெறும் முயற்சியில் ஜவான் மூலம் அந்த லிஸ்டில் இணைய முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அட்லி. இந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா?

 

தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட மிலிட்டரி ஆபீஸர் அப்பா ஷாருக்கானுக்கு பிறக்கும் மகன் ஷாருக்கான், ஜெயிலில் பிறந்து வளர்கிறார். அந்த ஜெயிலிலேயே படித்து போலீசுக்கு தேர்வாகி பின்னாளில் அந்த ஜெயிலுக்கே ஜெயிலராகிறார். அந்த ஜெயிலில் இருந்து கொண்டே அங்குள்ள பெண் கைதிகளை வைத்துக் கொண்டு அவர் செய்யும் சாகசங்களும், அரசாங்கத்தை தட்டிக் கேட்கும் துணிச்சலுமே ஜவான் படத்தின் கதையாக விரிகிறது. இப்படி அவர் தட்டிக் கேட்கும் சமயத்தில் தன் அப்பாவுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர் எப்படி நியாயம் வாங்கித் தருகிறார் என்பதே ஜவான் படத்தின் மீதிக் கதை.

 

தமிழிலிருந்து ஹிந்திக்கு சென்ற அட்லி, அங்கு தன்னை நிரூபித்து தனித்தன்மையாகக் காட்ட என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில், அதை திறம்படச் செயல்படுத்தி எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து ஜவான் மூலம் பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் இயக்குநர் அட்லி. ஒரு படமாக நாம் இதைப் பார்க்கும் பட்சத்தில் தமிழில் நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய பல சமூகப் போராளிகள் படங்களை இந்த படம் நினைவுபடுத்தினாலும் அதை எல்லாம் மறக்கடிக்கச் செய்து ரசிக்கும்படியான காட்சி அமைப்புகள் மூலம் ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லி. 

 

jawaan movie review

 

படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோவுக்கு என்னவெல்லாம் மாஸ் எலிமெண்ட்ஸ் தேவையோ அதை காட்சிக்கு காட்சி சிறப்பாகச் செய்து கமர்சியல் ரசிகர்களுக்கு ஏற்றவாறும், குடும்ப ரசிகர்களுக்கு ஏற்றவாறும், சென்டிமென்ட் ரசிகர்களுக்கு ஏற்றவாறும் கலந்து கட்டி சிறப்பாகக் கொடுத்து படத்தைக் கரை சேர்த்திருக்கிறார். படத்தின் திரைக்கதை நாம் ஏற்கனவே பார்த்து பழகிய இயக்குநர் சங்கர் படங்களை நினைவுபடுத்தினாலும் அவை ரசிக்கும்படியாக அமைந்து தியேட்டரில் கைத்தட்டல் பெற்றுள்ளது. அதேபோல அட்லியின் அக்மார்க் விஷயங்களும் இப்படத்தில் இடம்பெறச் செய்யத் தவறவில்லை. குறிப்பாக அவரின் ஸ்டைலிலேயே பல காட்சிகள் இப்படத்தில் அமைந்து அவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளது. இருந்தும் முதல் பாதியைக் காட்டிலும் ஜவான் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாகக் கொடுத்ததை தவிர்த்து இருக்கலாம். படத்தின் நீளத்தை சற்றுக் குறைத்திருக்கலாம்.

 

ஒரு மாஸ் ஹீரோ என்றால் என்னவெல்லாம் திரையில் செய்ய வேண்டுமோ அதை திறம்படச் செய்து மாஸ் காட்டியிருக்கிறார் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான். வழக்கம்போல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் சரி, சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி, மாஸ் காட்சிகளிலும் சரி திரையில் அதகளப்படுத்தி இருக்கிறார். இவருக்கு பக்கபலமாக நாயகி நயன்தாராவும் இன்னொரு பக்கம் மாஸ் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளைக் காட்டிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் பறந்து பறந்து அடித்திருக்கிறார். ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு நயன்தாரா ஒரு நல்ல தேர்வு. அதேபோல் ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் நாயகி தீபிகா படுகோன் தனது பங்கிற்கு படத்தை தாங்கிப் பிடித்துள்ளார். சின்ன சின்ன முக பாவனைகளில் கூட நம்மை நெகிழ வைத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். இவர் படத்தில் கொஞ்ச நேரமே தோன்றினாலும் மனதில் பதிகிறார். வழக்கம்போல் யோகி பாபு இந்த படத்திலும் இருக்கிறார் ஆனால் இந்த தடவை ரசிக்க வைத்திருக்கிறார் சிரிப்பு காட்டி.

 

jawaan movie review

 

வில்லன் விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது எதார்த்த நடிப்பு மூலம் வில்லத்தனம் காட்டி மாஸ் காட்டி இருக்கிறார். இவர் செய்யும் வில்லத்தனம் தமிழுக்கு வேண்டுமென்றால் பரிச்சயமாக இருக்கலாம்., ஆனால் இந்திக்கு புதிதாக இருக்கும். அதுவே இந்த படத்திற்கு பலமாக மாறி இருக்கிறது. ஷாருக்கான் உடன் நடித்த ஐந்து பெண்களும் அவரவருக்கான வேலையைச் சிறப்பாக செய்து மாஸ் காட்டி இருக்கின்றனர். ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அவரவர்களுடைய பங்களிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் அளிக்கும்படியான காட்சிகள் இப்படத்தில் இருப்பதால் அவரவருக்கான பங்களிப்பில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சின்ன கேமியாவில் வரும் சஞ்சய் தத் படத்திற்கு இன்னொரு பிளஸ். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

 

இந்த படத்தின் இன்னொரு ஹீரோ அனிருத் என்றால் மிகையாகாது. இப்போதெல்லாம் ஒரு படத்தில் அனிருத் இருக்கிறார் என்றாலே அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிறது. அந்த அளவுக்கு மாசான இசையை படம் முழுவதும் அள்ளித் தெளித்து ரசிகர்களை குஷிப்படுத்தி தியேட்டரில் விசிலும் கைதட்டலும் வர வைத்து விடுகிறார். காட்சிக்கு காட்சி இவர் அமைக்கும் பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறது. அதேபோல் இவரது பாடல்களும் ரசிகர்களைக் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஷாருக்கானுக்கு பிறகு அனிருத் தான். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளையும், சென்டிமென்ட் காட்சிகளையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். படம் முழுவதும் ரூபனின் படத்தொகுப்பு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. எந்த இடத்தில் எந்த கட் தேவையோ அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். படத்தின் நீளத்தில் மற்றும் சற்று அவர் கவனமாக இருந்திருக்கலாம்.

 

ஜவான் படம் நமக்கு பல இடங்களில் கூஸ்பம்ப் மொமன்ட்ஸ்களைக் கொடுத்து பரவசப்படுத்தினாலும் இவை நாம் ஏற்கனவே பார்த்துப் பழகி பரிச்சயமான திரைக் கதையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவை நம்மை ரசிக்க வைக்கத் தவறவில்லை. இருந்தும் அது தமிழுக்கு பழையதாகத் தெரிந்தாலும் இந்திக்கு புதுமையான ஒரு விஷயம். இந்த விஷயங்களே ஜவானுக்கு பெரிய பிளஸ் ஆக மாறி படத்தை ஒரு சூப்பர் ஹிட் படமாக மாற்றி அட்லிக்கு இன்னொரு வெற்றிப் படமாக இது அமைந்திருக்கிறது. ஜவான் மூலம் ஹிந்தியிலும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் இயக்குநர் அட்லி.

 

 

ஜவான் - ஜமாய்!

 


 

சார்ந்த செய்திகள்