Skip to main content

"ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுங்கள்" - விஜய்க்கு பிரபல இசையமைப்பாளர் அட்வைஸ்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

james vasanthan shared his thoughts on vijay dressing in varisu audio launch

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தனியார் தொலைக்காட்சியில் நேற்று தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. 

 

இந்த நிலையில், 'சுப்ரமணியபுரம்', 'பசங்க', 'ஈசன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் தோற்றம் குறித்து விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவில், "வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப் பார்த்தேன். விஜய் பேசிக் கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிப்படுத்தி, இந்தப் பிரமாண்ட விழா மேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். 

 

எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்குப் போகும் போது ஏன் அவ்வளவு பொறுப்பாகப் பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற; பின்பற்றுகிற பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள்; அதுவும் விஜய் போன்ற உச்சபட்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய்க் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில், இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். 

 

நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொது மேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.