Skip to main content

‘அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே...’ - சவால் விடும் ‘இந்தியன்’

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
indian 2 first single paaraa released

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்பு படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. 

மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஐ.பி.எல். போட்டியில் கமல்ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியானது. இன்று இப்பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை பாடலின் ப்ரொமோ வெளியானது. ‘பாரா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்பாடல் அனிருத் மற்றும் ஸ்ருதிகா பாடியுள்ளனர். பா.விஜய் வரிகள் எழுதியுள்ளார். 

ஏற்கனவே அறிவித்தது போல் தற்போது இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருக்கும் இந்தியனை பற்றி இப்பாடல் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. பாடலில் வரும், ‘இது தாய் மண்மேல் ஆணை, இது தமிழ் மானத்தின் சேனை...’, ‘வெள்ளை ரத்தம் தொட்டு, இனி வாழில் ஏற்று சானை...’, ‘அடிமைகள் ரத்தத்துக்கு வெப்பம் தந்த வீர தீயே, அதிகார வர்கத்துக்கு அரைகூவல் நீயே...’ போன்ற அழுத்தமான வரிகள் இடம் பெறுகிறது. இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“இசை வழியே என் தந்தையுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி” - ஸ்ருதிஹாசன்

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
shruthi hassan about kamal in at indian 2 audio launch

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியிட்டு விழா, கடந்த ஜூன் 1ஆம் தேதி சென்னை உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

இதில் கமல், ஷங்கர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகையும் கமலின் மகளுமான ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார். இதில் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களைத் தொகுத்து அதைத்தன் இசை மற்றும் நடனத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். இந்தத் தருணத்தை தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன்,  ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., '' என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும்தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்'' என்றார். இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர். நடிப்பில் ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Next Story

“வழியும், ஒளியும் காட்டக் கூடியவை” - கமல்ஹாசன் வாழ்த்து

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
kamalhassan wishes dmk party to win lok sabha election in tamilnadu

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 5.30 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 236 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில், திமுக கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க. உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும். ஒளியும் காட்டக் கூடியவை. இந்தியா வாழ்க. தமிழ்நாடு ஓங்குக. தமிழ் வெல்க” என்றார்.