Skip to main content

காப்புரிமை விவகாரம் - இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய படக்குழு

Published on 06/08/2024 | Edited on 06/08/2024
ilaiyaraaja manjummel boys copywright issue

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது. அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், அனுமதியின்றி குணா படப் பாடலை பயன்படுத்தியதாக 'மஞ்சுமல் பாய்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்காவிட்டால் பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி, பாடலுக்கான உரிமையை சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் பெற்றுத்தான் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இருதரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளையராஜா தரப்பு ரூ.2 கோடி கேட்டதாகவும் இறுதியாக ரூ.60 லட்சம் இழப்பீடாகக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்