/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/D out.jpg)
சென்னையில் நடைபெற்ற பொம்மைநாயகி இசைவெளியீட்டு விழாவில்அப்படத்தின் இயக்குநர் ஷான் பேசியதாவது..
“இந்த படத்தின் கதையை எழுதியவுடன் நிறையபேரிடம் சொல்லவில்லை. ஆனால் அப்படி கேட்டவர்கள் பலரும் இந்த கதையைத் தயாரிக்க வேண்டும் என்றால் நீலம் புரொடக்சன்ஸ் மட்டுமே சரியான இடமாக இருக்கும் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் தான் இயக்குநர் பா.ரஞ்சித் தனது உதவி இயக்குநர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பதற்காகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதில் பரியேறும் பெருமாள் என்கிற திரைப்படத்தைத் தயாரித்து வந்தார்.
அப்போதிருந்து அவரை சந்திக்க முயற்சித்து பல வருடக் காத்திருப்புக்குப் பின் ஒரு வழியாக அவரிடம் எனது கதையைக் கொண்டு சேர்த்தேன். கதையைப் படித்தவர் முதலில் எனது உதவி இயக்குநர்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறேன். அதனால் வேறு தயாரிப்பாளர்களிடமும் கூட இதைக் கூறுமாறு என்னிடம் சொன்னார். தேவைப்பட்டால் என்னுடைய உதவி இயக்குநர் என்று கூட நீ சொல்லிக்கொள் என அனுமதியும் அளித்தார்.
அதைக்கேட்டு எனக்கு அவரிடம் பணிபுரியும் உதவி இயக்குநர்கள் மீது பொறாமையாக இருந்தது. இவரிடமே உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கலாமோ என்று கூட நினைத்தேன். அவரிடம் அப்போதைக்குசரி என்று சொன்னாலும், நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தான் இந்தக் கதையை பண்ண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஒருவழியாக என்னுடைய கதையை தயாரிக்க இயக்குநர் பா.ரஞ்சித் முன் வந்தார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக யாரை அணுகலாம் என நினைத்தபோது, பரியேறும் பெருமாள் படத்தில் யோகிபாபுவின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்யலாம் என பா.ரஞ்சித்திடம் கூறினேன். யோகிபாபுவை ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை அவர் என்னிடமே ஒப்படைத்துவிட்டார். அந்த சமயத்தில் தென்காசியில் கர்ணன் படப்பிடிப்பில் இருந்த யோகிபாபுவை நேரில் சந்தித்து இந்த கதையைக் கூற முயற்சித்தேன். யோகிபாபுவிடம் நான் கதை சொல்ல வேண்டும் என உதவி செய்யும் விதமாக இயக்குநர் மாரி செல்வராஜ், அவருக்கானகாட்சிகளை படமாக்காமல் தள்ளிவைத்து யோகிபாபுவின் பொன்னான 3 மணிநேரத்தை எனக்காக ஒதுக்கித் தந்தார்.
அதேசமயம் இந்த கதையை யோகிபாபுவிடம் கூறும்போது நீங்கள் தான் கதையின் நாயகன் என சொன்னதும் முதலில் அவர் தயங்கினார். என்னுடைய நல்ல நேரமோ என்னவோ அவரது உதவியாளர், இவர் வைத்திருப்பது சீரியசான கதை என்று சொன்னதுமே ஆர்வமாகி உடனே கதை கேட்டு நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க நாங்கள் சரியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருந்த ஸ்ரீமதி எங்கள் கண்களில் பட்டார். அவரது தந்தையிடம் சென்று படத்தில் நடிக்க அனுமதி கேட்டோம். முதலில் மறுத்தவர் பின்னர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டு தனது மகள்நடிக்க சம்மதித்தார்.
சென்சாரில் இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் இந்த கதையை சரியாக கையாண்டு உள்ளீர்கள் என பாராட்டினார்கள். ஒரு தயாரிப்பாளராக பா.ரஞ்சித்தை பொருத்தவரை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான விஷயங்கள் படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். அப்படி இருந்தால் சென்சாருக்கு முன்பாக அவரே அதையெல்லாம் நீக்கிவிடுவார். படம் முடிந்துவிட்டாலும் படத்தை பார்க்காமலேயே அதன்மீது யோகிபாபு வைத்திருக்கும் நம்பிக்கைதான் அவர் இந்த நிகழ்வில் தனது பிஸியான நேரத்தையும் ஒதுக்கி கலந்து கொண்டு பொறுமையாக அமர்ந்திருப்பதற்கான காரணம்..
இந்த படத்திற்கு ஆரம்பத்தில் அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்வார் என நான் சொன்னபோது முதலில் பா.ரஞ்சித் தயங்கினார். ஆனால் நிலைமை மாறி அதிசயராஜுக்கு இனி வாய்ப்புகள் இருந்தால் நானே சொல்லி விடுகிறேன் என பா.ரஞ்சித்தே கூறும் அளவிற்கு அற்புதமான ஒளிப்பதிவை இந்த படத்தில் கொடுத்துள்ளார் அதிசயராஜ்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)