அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை சை.கெளதமராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக படக்குழுவினரை சந்தித்தோம். படக்குழுவினர் பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் கௌதம் ராஜ் பேசியதாவது, “ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரண தண்டனை கொடுப்பதற்காக அந்தக் காலத்தில் கழுமரம் வளர்க்கப்பட்டது. இன்று அந்த தண்டனை இல்லாவிட்டாலும் கழுமரம் இருக்கிறது. அதை இன்றும் சாமியாக மக்கள் கும்பிடுகிறார்கள். அது ஏன் என்கிற அடிப்படையில் உருவானது தான் இந்தக் கதை.
என்னுடைய முதல் படமான ‘ராட்சசி’ வித்தியாசமான ஒரு படம் தான். ஆனாலும் அந்தப் படத்தை ரசிகர்கள் விரும்பும் வகையில் என்னால் எடுக்க முடிந்தது. அரசியல், சாதி சார்ந்த விஷயங்கள் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளன. பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் பேசும் அரசியல் ஒன்று. முத்தையா போன்றவர்கள் பேசும் விஷயங்கள் இன்னொன்று. இதில் மூன்றாவதாக ஒரு பார்வையை நான் முன்வைத்துள்ளேன்.
ராமநாதபுரம் பகுதிகளில் ஷூட் செய்வது கடினமாக இருந்தாலும் கதைக்கு அது முக்கியமாக இருந்தது. இதுவரை அருள்நிதி செய்த சண்டைக் காட்சிகளை எல்லாம் தாண்டியதாக இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் இருக்கும். மிகுந்த ரிஸ்க் எடுத்து நடித்தார்.