/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/806_6.jpg)
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படத்தின் முதல் பாகத்தின்வெற்றியைத் தொடர்ந்துபிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியாமுதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் கடந்த 2022ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி கவனம் பெற்றது.
பிசாசு 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட், ஃபிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து படத்தின் விநியோக உரிமையை பெற்று இருந்துள்ளது. அந்த விநியோக உரிமை ஒப்பந்தப்படி, இரண்டு கோடி ரூபாயை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பாக்கி வைத்துள்ளது. நிலுவையில் இருக்கும் இந்த பாக்கி தொகையைக் கொடுக்காமல் ‘குருதி ஆட்டம், மன்மத லீலை உள்ளிட்ட படங்களை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படங்களை வெளியிடத் தடை விதிக்க கோரி தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்தியஸ்தரை நியமித்திருக்கிறது.
அதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடத்தியமத்தியஸ்தர், ரூ.1.17 கோடியுடன் சேர்த்து ஜி.எஸ்.டி. தொகையான ரூ.31 லட்சத்து இருபதாயிரத்தை வழங்க ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறி அந்நிறுவனம் பிசாசு 2 படத்தைத் தயாரித்து வெளியிடப்போவதாக ஃபிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வட்டியுடன் சேர்த்து நிலுவையில் இருக்கும் ரூ1.84 கோடியை வழங்கும் வரை பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் நவம்பர் 18ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பாக பதிலளிக்க ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)