/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/295_12.jpg)
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் 'துருவ நட்சத்திரம்' மற்றும் எம். ராஜேஷ் மற்றும் ஜெயம் ரவியின் 'பிரதர்' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில் துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பிரதர் படம் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
திரைப்படங்களைத்தாண்டி அவ்வப்போது இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஹாரிஸ் ஜெயராஜ், நேற்று சென்னையில் 'ராக் ஆன் ஹாரிஸ்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை 'நாய்ஸ் அன்ட் க்ரைன்ஸ்' (Noise and Grains) என்ற நிறுவனம் மேற்கொண்டது.
கடந்த மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில், ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டு பெரும் சர்ச்சையானதால் ஹாரிஸ் ஜெயராஜ் நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டது. இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சரியான இருக்கைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட விஷயங்களை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களுடன் திரை பிரபலங்களாகிய கீர்த்தி சுரேஷ், கெளதம் மேனன், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டு களித்தனர். அப்போது கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'அதாரு அதாரு...' பாடல் பாடப்பட்ட போது ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷும், கெளதம் மேனனும் நடனமாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)