விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழு தற்போது பிரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ரத்னம் படம் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் தமிழகம் முழுவதும் உலா வர படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேனின் முதல் பயணத்தை தொடங்கி வைத்தார் ஹரி. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் என்னுடைய 17வது படம். சாமி, சிங்கத்துக்கு அப்புறம் சரியான ஒரு ஆக்ஷன் படம் கொடுக்க வேண்டும் என நினைச்சேன். அதை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். விரட்டி விரட்டி அடிக்கணும், துரத்தி துரத்தி மிதிக்கணும், இந்த மாதிரி ஒரு வெறி வரும். அந்த வெறியை எப்படி தணிக்க வேண்டும் என பார்த்தால் படம் பார்த்து ஜாலியா தணிச்சிட்டு போயிடலாம். யாரையும் அப்படி அடிக்க தேவையில்லை.
ஏன் அந்த வெறியில் படம் எடுத்திருக்கிறேன் என்றால், இன்னைக்கு ரோட்டில் போவதில் 60% பேர் கெட்டவன். 40% பேர் தான் நல்லவன். கெட்டவன்கிட்டயிருந்து நல்லவனை காப்பாத்தணும். அதை போலீஸ் செய்ய முடியும். இல்லைன்னா, பொது எண்ணம் கொண்ட ரத்னம் மாதிரி ஒரு ஹீரோவால் சினிமாவில் முடியும். ரோட்டில் போகிறவனை யாரும் அடிக்க முடியாது. அது விதிமுறையும் கிடையாது. அதுக்கு வாய்ப்பும் இருக்காது. இருந்தாலும் அடிக்க வேண்டும் என நினைக்கிறவன் தான் ஹீரோ. அதில் பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறவன் தான் ஹீரோ. அது சினிமாவில் மட்டும் தான் நடக்கும். அந்த சினிமாவை தான் எடுத்திருக்கிறேன்.
அநியாயத்தை தட்டி கேட்பதை இன்றைய ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி பண்ணியிருக்கேன். எல்லா அரசியல் தலைவர்களும் நமக்கு தெரிஞ்சவங்க தான். ஆனாலும் அவங்க தேர்தல் பிரச்சாரம் பண்ணால் தான் மக்கள் ஓடு போட வராங்க. அதே போல் நாங்களும் எங்க படத்தை விளம்பரப் படுத்த வேண்டும் என்ற தேவை இருக்கு. இந்த வண்டி தமிழ்நாடு முழுக்க வலம் வரும். நாங்களும் பயணிக்கவுள்ளோம். மக்களை மதித்து பண்ணுவது தான் இந்த பப்ளிசிட்டி” என்றார்.