கடந்த வருடம் புதிய நீர் மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் திட்டத்தை கத்தார் நாடு செயல்படுத்தி இருந்தது. அங்கு தயாரிக்கப்பட இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்துடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு கத்தார் நாட்டின் கப்பல் படைக்காக உருவாக்கப்பட இருந்தது. இந்த வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று 'அல்தாரா'. இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 75 பேரை பணியில் அமர்த்தியிருந்தது.
இந்த 75 பேரில் முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேர் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அந்த 8 பேரை கத்தார் உளவுத் துறை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் அந்த முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது கத்தார் நீதிமன்றம்.
இந்த தீர்ப்பிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கத்தாரில் எட்டு கடற்படை முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்ப்பின் முழு விவரங்கள் வெளி வருவதற்காக காத்திருக்கிறோம். எட்டு பேரின் குடும்பத்தினரோடும், சட்ட வல்லுநர்களுடனும் தொடர்பில் உள்ளோம். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள இந்தியர்கள் 8 பேரைக் காக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமக்காக இரவு பகல் பாராது உழைத்த நமது கடற்படை வீரர்கள் 8 பேரையும் நம் தாயகத்திற்கு பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நமது இந்திய அரசு எடுக்கும் அத்துனை முயற்சிகளுக்கும் துணை நிற்போம். ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
நமக்காக இரவு பகல் பாராது உழைத்த நமது கடற்படை வீரர்கள் 8 பேரையும் நம் தாயகத்திற்கு பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நமது இந்திய அரசு எடுக்கும் அத்துனை முயற்சிகளுக்கும் துணை நிற்போம்…
ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம் 🙏— G.V.Prakash Kumar (@gvprakash) October 27, 2023