சென்னையில் ''பஸ் டே'' எனப்படும் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக கூறி ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பேருந்தில் மேற்கூரையில் அமர்ந்து பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னே பைக்கில் சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து ஓட்டுனரும் சடாரென பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடாரென கீழே விழுந்தனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பேருந்து தினம் கொண்டாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பேருந்து தினம் கொண்டாடியது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துதிருந்தனர். பின்னர், ஒன்பது மாணவர்களை பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்த சம்பவம் நடந்தேறிய சமயத்தில், சென்னை கல்லூரி மாணவர்களிடையே பிரபலமாக இருந்த ‘கும்பலாத்தான் சுத்துவோம்’ என்கிற கானா பாடலும் ட்ரெண்டானது. பேருந்து தினத்தை கொண்டாடிய மாணவர்களை கலாய்க்கும் விதத்தில் இந்த பாடலை சேர்த்து வீடியோக்கள் சமூக வலைதளத்தில் சூழ. இந்த கானா பாடல் மட்டும் தனியாக ட்ரெண்டாக தொடங்கியது. சினிமாக்களில் வரும் வீடியோ பாடல்களுடன் இந்த பாடலை சிங்க் செய்து பரவியது. தற்போது யூ-ட்யூப்பில் இந்த பாடலின் வீடியோ 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலை எழுதி பாடியிருப்பவர் கானா ஸ்டீப்பன் என்ற கானா பாடும் பச்சையப்பா கல்லூரி மாணவர் ஒருவர். இதற்கு முன்னர் ‘மைமா’ என்றொரு கானா பாடலும் யூ-ட்யூபில் பிரபலமானது. அது சுமார் 65 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கானாவை அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் தேவா. ஆனால், அவர் சினிமாவிற்கு ஏற்றார்போல உண்மையான கானாவை காட்டாமல் ஓரளவிற்கு சினிமாத்தன்மையுடன் அமைத்திருப்பார். அட்டக்கத்தி போன்ற படங்களுக்கு பின்னர்தன் தமிழ் சினிமாவில் உண்மையான கானாவும் இடம்பெற்றது. தற்போது அது சமூக வலைதளங்களில் உதவியுடன் நன்கு பரவி வருகிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் ஹிப்ஹாப் எப்படி பரவி, தற்போது அது ஒரு மிகப்பெரிய கலாச்சாரமாக இருக்கிறதோ. அதுபோல இதுவும் மாறும் சூழல் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.