Skip to main content

"இவன்லாம் ஹீரோவா...?!" - கேட்டவர்களுக்கு தொடும் உயரங்களால் பதில் கொடுக்கும் தனுஷ்!

 

dhanush


"இதுதான் நான் படிச்ச ஸ்கூல்..." என்று சொல்லிக்கொண்டே படத்தின் முதல் காட்சியில் என்ட்ரி கொடுத்த அந்தப் பையனைப் பார்த்து, அன்று கேலியாகச் சிரிக்காதவர்கள் சிலர் மட்டுமாகத்தான் இருக்கும், அதே பையனைப் பார்த்து, இன்று வியக்காதவர்கள் வெகு சிலராகத்தான் இருக்கும். அந்தப் படம் 'துள்ளுவதோ இளமை', அந்தப் பையன் தனுஷ். அன்று தன்னுடைய திரைப்பயணத்தை இவ்வாறு தொடங்கிய தனுஷ், இன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாக வென்று அசத்தியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருக்க தோற்றம் தேவையற்றது, திறமை போதுமானது என்று நிரூபித்துக் காட்டியவர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். அவருக்கு முன்பே கறுப்பாக இருப்பவர்கள், குண்டாக இருப்பவர்கள் எனப் பலரும் நாயகர்களாக வென்றிருந்தாலும், தனுஷ் முற்றிலும் புதிய வகை நாயகன். அத்தனை ஒல்லியான நாயகனை, தமிழ் சினிமா அதுவரை பார்த்ததில்லை. 'துள்ளுவதோ இளமை' படத்தை அவருடைய அப்பா இயக்க, அதில் நோஞ்சான் உடம்பை வைத்துக் கொண்டு பள்ளி மாணவனாக நடித்திருப்பார் பிரபு. ஆம், திரைப்படத்துக்காக இவரது பெயர் தனுஷ் ஆனது. தனுஷின் அண்ணன் செல்வராகவன்தான் இந்தப் படத்தை இயக்கினாலும் வியாபார காரணத்துக்காக தந்தை பெயர் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடினாலும், தனுஷின் தோற்றம் கிண்டல் செய்யப்பட்டது. அதுவும் முதல் காட்சியிலும் கடைசியிலும் ஒட்டு மீசை வைத்துக்கொண்டு நோஞ்சான் உடம்புடன் ஆர்மி மேனாக வந்திருந்ததை சிரித்துக்கொண்டுதான் பலரும் பார்த்தார்கள்.

 

படத்தில் இசை, ஒளிப்பதிவு, கதை எனப் பல விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும், படம் வெற்றி பெற்றதற்கு வேறு காரணங்களும் இருந்தன. 'தனுஷ்-ஷெரின்' நெருக்கம், பாடல்கள், மாணவப் பருவ கலாட்டாக்கள் என இந்தப் படம் வேறு விதமாகவே வெளிப்பட்டு வெற்றியும் பெற்றது. இது போன்ற கதையில் நடித்ததால் மட்டுமே, இப்படம் ஓடியது, கதாநாயகனுக்காக இல்லை என்றும் தனுஷ் முதல் படத்தோடு வெளியேறிவிடுவார் என்றுமே பெருமளவில் கணிக்கப்பட்டது. ஆனாலும், துள்ளுவதோ இளமை ஒரு ட்ரெண்ட் செட்டராகி அதற்குப் பின் ஒரு பத்து படங்களாவது பள்ளிப் பருவம், ஐந்து நண்பர்கள் போன்ற கதையைக் கொண்டு வெளிவந்து தோற்றது.

 

துள்ளுவதோ இளமை வெற்றிக்கு அடுத்து, அண்ணன் செல்வராகவன் இயக்க தம்பி தனுஷ் நடித்த படம் 'காதல் கொண்டேன்'. முதல் படத்தில் இருந்ததை இதிலும் எதிர்பார்த்துப் போனவர்களுக்குக் கிடைத்தது பெரும் அதிர்ச்சி. ட்ரெய்லர் தீம் இசையிலேயே 'இது வேற மாதிரி இருக்கே' என்ற உணர்வைத் தந்த படம், வெளிவந்தபோது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்ப அதிர்ச்சி அது. இவர்களிடமிருந்து இப்படி ஒரு படமா... இந்தப் பையனுக்குள் இப்படி ஒரு நடிகனா... இசை ஒரு படத்தில் இத்தனை பங்காற்ற முடியுமா என்ற அதிர்ச்சி. தனுஷ்-செல்வராகவன்-யுவன் அளித்த அந்தத் தாக்கம் தமிழ்த் திரையுலகில் சில ஆண்டுகள் நீடித்தது. கமல்ஹாசன், பாரதிராஜா, பாலுமகேந்திரா என அந்தப் படத்தைப் பற்றி அனைவரும் பேசினர். இந்தக் கதைக்கு ஏற்ற தோற்றம் தனுஷிடம் மட்டும்தான் அப்போது இருந்தது. முகத்தில் தாடியுடனும், புட்டிக் கண்ணாடியுடனும் அந்தப் பையன் க்ளைமேக்ஸுக்கு முன் 'திவ்யா...திவ்யா...' என்று போட்ட ஆட்டம் தமிழகத்தை உண்மையில் அதிர வைத்தது. ஒரு ஆதரவற்ற இளைஞனின் மனம் தேடும் அன்பு, அது கைநழுவிப் போகும்போது அடையும் ஏமாற்றம் என உளவியலை வெகு நேர்த்தியாகப் பேசியிருந்தது காதல் கொண்டேன். அதில் தனுஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. மீண்டும் இவர் ஒரு படம் நடித்தால், அதைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தது. படமும் மிகப்பெரிய வெற்றி. ஆனாலும், இவரால் வெகுஜனத்தைக் கவரும் வண்ணம் ஒரு படம் நடிக்க முடியாது என்றே  கருதப்பட்டது.

 

அதற்கும் அட்டகாசமாக பதில் கொடுத்தார் இந்த 'மன்மதராசா'. தன்னைக் குறித்த கணிப்புகளைத் தொடர்ந்து உடைத்தெறிந்தார், தனுஷ். நன்றாகச் சென்றுகொண்டிருந்த போது, தானே தடுக்கி விழுந்ததுபோல 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்', 'சுள்ளான்' படங்களில் நடித்தார். 'இவன்லாம் ஒரு ஹீரோவா...' என்று அன்று பேசியவர்களுக்கு இன்று காரணம் கிடைத்தது. இதுவரை கணிப்புகளை எல்லாம் உடைத்து வந்தவருக்கு ’சுள்ளான்’ மிகப்பெரிய சறுக்கலைக் கொடுத்தது. ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் 'இந்தியன் புரூஸ்லீ' என்ற அடைமொழியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டது, பலரையும் தூண்டிவிட்டது.
 

kathal kondane


இன்னொரு பக்கம் சிம்புவின் நேரடி போட்டியாளர் என்ற பெயர் வேறு. இருவருமே பெரிய அளவில் வளராத போதே வளர்ந்த 'ரைவல்ரி' பக்குவமான சினிமா ரசிகர்களை முகம் சுளிக்கவைத்தது. சிம்பு இவருக்கு 'பன்ச்' கொடுக்க, இவர் அவருக்கு 'பன்ச்' கொடுக்க என்று இருவரும் சில காலம் ரசிகர்களுக்கு 'பன்ச்' கொடுத்தனர். ’ட்ரீம்ஸ்’, ’தேவதையை கண்டேன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’ என்று போன பாதை மீண்டும் ‘புதுப்பேட்டை’-யில் சரியானது. அன்று பெரிதாய் வெற்றி பெறாத புதுப்பேட்டை, இன்று எந்த தியேட்டரில் சிறப்புக் காட்சி போட்டாலும் நிறைகிறது, கொண்டாடப்படுகிறது. மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வந்த தனுஷ், தன் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே போனார் வெற்றிகரமாக. பாடினார், பாடல் எழுதினார்... உலகமே பாடிய 'ஒய் திஸ் கொல வெறி'யை ஏற்காதவர்கள் கூட 'பிறை தேடும் இரவிலே... உயிரே'வை ஏற்பார்கள்.

 

கலையில் மட்டுமல்லாமல் நடித்த மொழியிலும் எல்லையை விரிவுபடுத்தினார். தேசிய விருது வாங்கிய கையோடு 'ஒய் திஸ் கொலவெறி' கொடுத்த உலகப்புகழும் சேர்ந்து தனுஷை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றது. ஆம், தமிழ்ப் படங்களில் மதுரை பையனாகவும், சென்னை பையனாகவும் வளம் வந்தவர். பாலிவுட்டுக்குச் சென்று வாரணாசி பையனாக நடித்து, பாலிவுட் பாக்ஸ் ஆஃபிசில் சேர்ந்தார். இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கூட இவரது வெற்றி தொடர்ந்தது. 'இவன்லாம் ஹீரோவா...' என்று பேசினவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் சினிமாவில் அவர் தொடும் உச்சம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது. 

 

'வி.ஐ.பி' படத்திற்குப் பிறகு அவருடைய ரேஞ்சே தனி என்பதுபோல் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டே வருகிறார். அவ்வப்போது, விடாப்பிடியாக ஒரு மசாலா படத்தையும் ரிலீஸ் செய்கிறார். 'வடசென்னை' மற்றும் 'அசுரன்' உள்ளிட்ட படங்களின் மூலம் தனுஷின் எழுச்சி என்பது வேறு ஒரு தளத்திற்குச் சென்றுள்ளது. நடிகராகவும் ஆளுமையாகவும் எழுச்சி கண்டுவருகிறார். தற்போது 'ஜகமே தந்திரம்', 'கர்ணன்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்க, கார்த்திக் நரேனுடன் ‘டி43’, மித்ரன் ஜவகருடன் ‘டி44’, இதுமட்டுமல்லாமல் மேலும் செல்வராகவனுடன் ஒரு படம், ராம்குமாருடன் ஒரு படம் எனத் தமிழில் அவர் நடிக்க இருக்கும் படங்களின் லிஸ்ட் நீள்கிறது. தன்னை இந்தியில் அறிமுகம் செய்த ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடித்து வருகிறார். 

 

cnc

 

நெட்ஃபிளிக்ஸ் ட்விட்டரில் ‘தி கிரே மேன்’ படம் பற்றி வெளியான அப்டேட்டை, தனுஷ் ரசிகர்கள், “ரகிட ரகிட ரகிட ஊ... என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்...” என்று ஜாலியோ ஜாலியாக சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். ஆமாம், அவர்களுக்குப் பிடித்தமான நடிகர் தனுஷ், 'அவெஞ்சர்ஸ்' புகழ் ரூஸோ பிரதர்ஸ் இயக்கும் 'தி கிரே மேன்' படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தியைக் கொண்டாடமாட்டார்களா? இதுமட்டுமல்லாமல் கிறிஸ் எவன்ஸ், ரயான் கோஸ்லிங் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் நெட்ஃபிளிக்ஸின் பிரம்மாண்ட பட்ஜெட் தயாரிப்பில் உருவாகும் ஹாலிவுட் மல்டி ஸ்டாரர் மூவி இது. கதைதேர்விலும் நடிப்பிலும் கைதேர்ந்து, சர்ச்சைகள், சரிவுகள் தாண்டிய உயரத்தை நோக்கி தொடர்ந்து அவர் முன்னேறுவதை யாராலும் மறுக்க முடியாது. தன்னை நோக்கிய ஏளனங்களை, கணிப்புகளை, தொடர்ந்து உடைத்தெறிந்து மேலே செல்கிறார், இந்த இந்தியன் ப்ரூஸ்லீ.