அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை சை.கெளதமராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக படக்குழுவினரை சந்தித்தோம். படக்குழுவினர் பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
கதாநாயகன் அருள்நிதி பேசியதாவது: கதை சிறப்பாக இருக்கும்போது ரசிகர்களால் அது நிச்சயம் வரவேற்கப்படும். படம் முழுவதும் நான் மூர்க்கத்தனமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். மக்களால் இந்தப் படம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். நான் இந்த நிலையில் இன்று இருப்பதற்கு ரசிகர்கள் தான் காரணம். அவர்கள் என்னிடம் த்ரில்லர் பாணியிலான படங்களை எதிர்பார்த்ததால் தொடர்ந்து த்ரில்லர் படங்கள் செய்தேன். ஆனால் ஒரே மாதிரி படங்கள் செய்தால் ரசிகர்களுக்கும் போர் அடித்துவிடும். அதனால் என்னுடைய ஜானரை மாற்றினேன்.
இந்தக் கதைக்குள் கமர்ஷியல் விஷயங்களையும் தாண்டி ஒரு நல்ல மெசேஜ் இருக்கிறது. உதயநிதி அண்ணன் இன்னும் படம் பார்க்கவில்லை. டீசர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பாவும் இந்தப் படத்தைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார். பாண்டிராஜ் சாரிடம் நான் தினமும் பேசுவதால் படம் குறித்த அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டேன். மாமன்னன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சூப்பராக இருக்கிறது. கோபம் இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்னும் பெரிய இடத்துக்கு போயிருப்பேன். அனைவருமே கோபத்தால் தான் பல விஷயங்களை இழக்கிறோம். தாத்தா கலைஞர் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் அவருக்கு மிகவும் பிடித்திருக்கும்.
வம்சம் படத்தை அவர் பார்த்துவிட்டு எனக்கு ஒரு கடிகாரம் பரிசளித்தார். "இது நீ நன்றாக நடித்ததற்காக இல்லை. இனி நன்றாக நடிக்க வேண்டும் என்பதற்காக" என்றார். இந்தப் படத்தை அவர் பார்த்திருந்தால் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நிச்சயம் சொல்லியிருப்பார். எங்களுடைய வேலையை நாங்கள் சரியாகச் செய்துள்ளோம். நான் வளர்ந்த விதமும் இந்தப் படம் பேசும் விஷயமும் ஒரே மாதிரி இருந்தது. இந்தப் படம் தேவையில்லாமல் யாரையும் உயர்த்தியும் பேசவில்லை தாழ்த்தியும் பேசவில்லை. உண்மையை மட்டுமே பேசியுள்ளது.