/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/260_9.jpg)
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பின்பு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது.
இதையடுத்து இப்படம் கடந்த 24 ஆம் தேதி திரைக்கு வருவதாகப் படக்குழு அறிவித்தது. ஆனால் வெளிவரவில்லை. இப்படத்தை வெளியிடத்தடை விதிக்கக் கோரி, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில், கௌதம் மேனன், 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் திருப்பி கொடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதுவரை படம் வெளியிட முடியாது எனத்தெரிவிக்கப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்பு பணம் திரும்ப செலுத்தப்படுமெனவும், அதன் பிறகே படம் வெளியிடப்படுமெனவும் கௌதம் மேனன் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனிடையே படம் வெளிவராதது குறித்து கௌதம் மேனன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் படத்தை வெளியிட முயற்சி செய்து வருவதாகத்தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு பார்வை, நிறைய அர்ப்பணிப்பு, எல்லாவற்றினாலும்தான் துருவ நட்சத்திரம் எழுத தொடங்கிய முதல் படமாக்கப்பட்டது தொடர்ந்து இன்று வரை உருவாகியுள்ளது. எல்லாமே எங்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும், எங்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் படத்தை விரைவில் வெளியிட உதவும் என்று நம்புகிறோம்.
நவம்பர் 24 ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தபோது, அதை நிறைவேற்ற மலையையே நகர்த்தும் அளவுக்கு முயற்சியும் செய்தோம். இந்தப் படத்தை நாங்கள் கைவிடவில்லை என்பதை பார்வையாளர்களுக்கு உறுதியளிக்கவே இந்த அறிவிப்பு. இந்தத் தடைகளைத் தாண்டி உங்களுக்காக துருவ நட்சத்திரத்தை திரையரங்குகளில் வெளியிட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)