gangai amaran speech in Kuttram Thavir Audio Launch

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா , மீசை ராஜேந்திரன் , ராணுவ வீரர் காமராஜ், குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரன் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். நிகழ்வில் பேசிய கங்கை அமரன் சிரித்து கொண்டே, “நான் வந்தா குறை சொல்லாம போறதில்ல. பத்திரிக்கை பார்த்தேன். அதில் இசை ஸ்ரீ காந்த் தேவான்னு போடல” என்று சொல்லி படத்தின் பி.ஆர்.ஓ-வை மேடைக்கு கூப்பிட்டார். அவரிடம் ஏன் பெயர் போடவில்லை என கேள்வி கேட்க, “டிசைனர் போடவில்லை. மறந்துவிட்டார்” என பி.ஆர்.ஓ.பதிலளித்தார். பின்பு “டிசைனர் போடவில்லை என்றால் செக் பண்ண வேண்டியது யார்” என கங்கை அமரன் கேட்டார். அதற்கு டைரக்டர் என பி.ஆர்.ஓ. பதில் சொல்ல உடனே டைரக்டரை கங்கை அமரன் மேடைக்கு அழைத்தார். அவரிடம் ஏன் போடவில்லை என கேள்வி கேட்க, “டிசைனிங் பண்ணும் போது நான் ஊரில் இல்லை” என கூறினார்.

பின்பு பேசிய கங்கை அமரன், “நிகழ்ச்சியின் ஹீரோ ஸ்ரீ காந்த் தேவா தான். அவரது பாடல்கள் இல்லை என்றால் இந்தவிழா நடக்காது. அவரது பெயரை போடாமல் விட்டது, எங்கலையெல்லாம் சேர்த்து கஷ்டப்படுத்துகிற மாதிரி இருக்கு” என்றார். இதையடுத்து இயக்குநர் மன்னிப்பு கேட்டார். இடையே கன்னட பத்திரிக்கையில் ஸ்ரீ காந்தின் பெயர் போட்டிருப்பதாக சிலர் சொன்னார்கள். அதற்கு கங்கை அமரன் கன்னடம் எனக்கு தெரியாது என பதிலளித்தார்.