Skip to main content

“அதிருப்தி இருப்பது தவிர்க்க முடியாத விஷயம்” - பொ.செ. 2 குறித்து பார்த்திபன்

 

"Dissatisfaction is inevitable" Parthiban on P.S.2

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி நல்லவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது வெறும் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல. மணிரத்னத்தின் அப்பாவின் பெயர் கோபால்ரத்தினம். ஆக இது கோபால்ரத்தினத்தின் செல்வனின் படம். இதை நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும். 

 

இது மணிரத்னத்தின் புனைவு. இதை இவ்வளவு வருடங்களாக நம்மால் ஏன் எடுக்க முடியாமல் இருந்தது. 13 எபிசோடுகளாக எடுக்க வேண்டியதை இரண்டு பாகங்களாக நம்மால் எடுக்க முடியாது என்று தோன்றியது. அதை மணிரத்னம் நிரூபித்துள்ளார். அதில் நிறைய குறைகள் இருக்கும். நாவலை படமாக்கும் போது அது முழுமை பெறவில்லை என்று உலகம் முழுதும் எத்தனையோ பேர் சொல்லியுள்ளார்கள். சுஜாதா, ஜெயகாந்தன் என அனைவரும் சொல்லி வருத்தப்பட்டுள்ளனர். அதனால் இவ்வளவு பெரிய வரி வசூல் செய்யும் படத்தினை மணிரத்னம் படைத்துள்ளார் என்பதால் அவருக்கு நாம் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். 

 

நேற்று நான் படம் பார்த்தேன். படம் பார்க்கும் போது நான் உணர்ந்தது.. டக் டக் என்று அந்த எபிசோடுகள் முடிகிறது உண்மைதான். இன்னும் கொஞ்சம் நீடிக்கலாம் என்று பார்த்தால் இருக்கும் 2.45 மணி நேரங்களில் அவ்வளவு பெரிய கதையை சொல்வது மிகப் பெரிய சவாலான ஒரு விஷயம். படைப்பாளியாக எவ்வளவு கடினம் எனத் தெரியும். அதை அவர் வெற்றிகரமாக செய்துள்ளார். அதில் கண்டிப்பாக பலருக்கும் அதிருப்தி இருப்பது தவிர்க்க முடியாத விஷயம்” எனக் கூறினார்.