ஒண்ணா இருக்க கத்துகணும்', 'வரவு எட்டணா செலவு பத்தணா' , 'காலம் மாறி போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் மற்றும் படத்தலைப்பு போன்றே நடுத்தர மக்களின் வாழ்வியலைத் திரையில் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியவர் இயக்குநர் வி.சேகர். நக்கீரன் ஸ்டூடியோ நடத்தும் 'மக்கள் சினிமா' நிகழ்ச்சி வாயிலாக அவரைச் சந்தித்தோம். அப்போது தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “கலை கலைக்காகவா? மக்களுக்காகவா? என்ற வாதம் சமுதாயத்தில் 40 ஆண்டுக்காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இதைப் பற்றிய வேறுபாடுகள் ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது. நான் கிராமத்தில் வாழ்ந்தவன். அங்கு திருவிழா காலங்களில் நடைபெறும் தெருக்கூத்து, கரகாட்டம் , காவடி, சிலம்பாட்டம் போன்ற கலைகள்தான் எனக்குத் தெரியும். ஆனால், அதில் உள்ள வித்தியாசங்கள் தெரியாது. நான் பண்ணையாரின் பேரன். எங்கள் வீட்டின் முன் நடக்கும் தெருக்கூத்து எல்லாம் ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளைத் தழுவி இருக்கும். அதை எல்லாம் அடிக்கடி கேட்டு சலிப்பாகிவிட்டது. அதைத்தான் பெரியவர்கள் எல்லோரும் விரும்பி பார்த்தார்கள். எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அந்தப் புராணக் கதைகளைப் படிக்க சொல்லுவார்கள். நான் எழுத்துக் கூட்டிப் படிக்கத் திணறுவேன். என்னுடைய ஆர்வம் எல்லாம் வெளியில் ஆடுவதை, பாடுவதைப் பார்ப்பதில்தான் இருந்தது.
எனக்கு எல்லாமே கலையாக இருப்பதால் அனைத்தையுமே ரசித்தேன். இதையே பார்த்து ரசித்த எனக்கு திடீரென ஒரு மாற்றம் தோன்றியது. அது என்னவென்றால் எங்கள் ஊரில் சாதிய பாகுபாடுகளும் சிலர் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்ற தீண்டாமையும் அரங்கேறியது. என்னுடன் படிக்கும் ஒரு பையன் எங்கள் வீட்டிற்கு வரும்போது சைக்கிளைத் தள்ளிக்கொண்டுதான் வருவான், ஓட்டிக்கொண்டு வரமாட்டான். என்னுடன்தான் வருவான் ஆனால் என்னுடன் வருவது தெரியக்கூடாது என வழியிலேயே இறங்கிவிடுவான். எனக்கும் அவனுக்கும் இருக்கும் உறவு பிறருக்குத் தெரிய கூடாது, அப்படி இருக்கும் ஊரில் ஒரு புரட்சி உருவானது. எங்கள் ஊருக்குள் மிலிட்டரிகாரர் ஒருவர் வந்தார். அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அவரிடம் உள்ள டூ வீலரில் ஊருக்குள் ஒரு பத்து ரவுண்ட் வலம் வருவார். அங்கு உள்ள மேட்டுக்குடி மக்கள் அவரை பஞ்சாயத்தில் நிறுத்தி “ஏன்பா நீ பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் தான, நீ செருப்பே அணியக் கூடாது, உன் இஷ்டத்துக்கு ஊருக்குள்ள டூ வீலரில ரவுண்ட் அடிக்குற” என்றனர். அதற்கு அவர், நான் யார் தெரியுமா மிலிட்டரியிலிருந்து ஓய்வு பெற்றவன் என்றார். அதற்கு ஊர் மக்கள், “மிலிட்டரி எல்லாம் பார்டருடன் வைச்சுக்கோ, அது வேற இது வேற” என்றனர். உடனே அவர் போலீஸில் புகார் தெரிவித்தார். போலீசார் நன்றாக விசாரித்த பிறகு, இன்னும் இது போன்ற நடைமுறைகள் கிராமத்தில் இருக்கிறது, நான் பேசிக்கொள்கிறேன் என அவரிடம் சொல்லி அனுப்பிவைத்துவிட்டு, பஞ்சாயத்துத் தலைவரை அழைத்து, “என்னங்க அவரு புகார் கொடுத்திருக்காரு, நான் அதைக் கிழிச்சுட்டேன், மிலிட்டரிக்கு நம்ம ஊர் பழக்க வழக்கத்தைப் புரிய வைக்க வேண்டும்” என்று பஞ்சாயத்துக்காரர்களுக்குச் சாதகமாகப் பேசினார் .
பஞ்சாயத்துக்காரர்கள் வேறு யாரும் இல்லை என்னுடைய பெரியப்பா மற்றும் பங்காளிகள்தான். நான் அப்போது சின்ன பையன். எனக்கு அந்த மிலிட்டரிகாரரை பிடிக்கும். எதிரிகளை எப்படி சுடுவீர்கள் என்று அவரிடம் கதைக் கேட்பேன். அவரிடம் பேசுவதைப் பார்த்தால், “சேரியில் இருக்கிறவர்களுடன் ஏன் பேசிட்டு இருக்க” என்று எங்க வீட்டில் என்னை அடிப்பார்கள். அதற்கு நான் நீங்க யாரும் மிலிட்டரிக்கு போகவில்லை, அவர் போனார். அதனால் அவரிடம் அதைப்பற்றிப் பேசினேன் என்பேன். என்னால் ஊருக்காரங்க மத்தியில் அவருடன் நெருங்கிப் பழக முடியவில்லை. அவர் துப்பாக்கி எல்லாம் கையில் வைத்திருக்கிறார், சுட்டுள்ளார் என்று அவர் மீது எனக்கு பிரியம் உண்டு. நாங்கள் பண்ணையார் என்பதால் துப்பாக்கி எங்க வீட்டிலும் இருந்தது. ஆனால், அதில் முயல், மான், போன்றவற்றைத்தான் சுட்டுள்ளனர்
இந்நிலையில் எங்க ஊருக்கு சினிமா கொட்டகை வந்தது. பெரிய பணக்காரர்கள் பெஞ்சுல உட்கார்ந்தும், ஏழை மக்கள் மணலில் உட்கார்ந்தும் படம் பார்ப்பார்கள். சினிமா கொட்டகைகாரர் பண்ணையார், ஊர் தலைவர்களிடம் மரியாதைக்காக டிக்கெட் கொடுக்காமல் அவர்களை பெஞ்சு சீட்டில் படம் பார்க்க அனுமதிப்பார். அந்த மிலிட்டரி காரர் பெஞ்சுல உட்காரும் டிக்கெட் ஐந்தை வாங்கிக்கொண்டு, பின்னர் சினிமா கொட்டகை விளக்கை அணைத்ததும், பண்ணையார்கள் அருகில் அமர்ந்து படம் பார்ப்பார். இடைவேளை வந்ததும் அருகில் அமர்ந்து படம் பார்த்த பட்டியலின மக்கள் சிலரையும் அந்த மிலிட்டரிகாரரையும் பார்த்த பண்ணையார்கள் சினிமா கொட்டகை ஓனரை அழைத்து, “என்னப்பா எங்களுக்குப் பக்கத்துல அவங்களும் உட்கார டிக்கெட் கொடுத்திருக்க” என்றதும், “அவங்க எந்த டிக்கெட் எடுத்தாங்களோ அதற்கு ஏற்றவாறுதான் உட்கார வைக்க முடியும் தரையில் அவர்களை உட்காரச் சொல்ல முடியாது. உங்க ஊரில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இங்கு அவங்க புகார் தெரிவிச்சா அரசாங்கம் உரிமத்தை கேன்சல் பண்ணிடுவாங்க” என ஓனர் பதிலளிக்க அதன் பிறகு பண்ணையார்கள் படம் பார்க்க வருவதையே நிறுத்தி விட்டனர்.
அடுத்தாக ஊரில் ரோடு போட்ட பிறகு எங்கள் ஊர் தலைவர் பேருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பட்டியலின மக்கள் பேருந்தில் ஏறி பண்ணையார்கள் அருகில் அமர்ந்துகொள்வார்கள். இதனால் பேருந்தை நிறுத்தாமல் சென்று விடுவார்கள். பின்பு வெறும் பண்ணையார்களை மட்டும் ஏற்றி சென்றால் டிக்கெட் வசூல் ஆகாது என்று பட்டியலின மக்களையும் பேருந்தில் ஏற்றி பின் சீட்டில் உட்கார சொல்லுவார்கள். பேருந்தில் கூட்டம் அதிகமாக வந்தால், எங்கள் ஊர் மிலிட்டரிகாரர் பத்து பேருடன் வந்து பின் சீட்டில் இல்லாமல் பண்ணையார்கள் அருகில் அமர்ந்துகொள்வார்கள். அதைப் பார்த்து அருகில் அமரக்கூடாது என எழுந்து நின்றுகொண்டே பண்ணையார்கள் போவார்கள். அதன் பிறகு பண்ணையார் ஒருவர் கார் வாங்கி கொண்டார். இந்தச் சூழலில் தான், எங்கள் ஊரில் சினிமா கொட்டகை மற்றும் பேருந்தில் ஒரு மாற்றம் உருவானது. இது பண்ணையார் வீட்டுப் பையனாக எனக்கு சரி என்று தோன்றியது. எங்கள் வீட்டில் இதைச் சொன்னால் திட்டுவார்கள். எங்கள் வீட்டில் உள்ள பண்ணையார்கள் அனைவரும் காங்கிரஸ்காரர்கள். அதே சமயம் கூலி வேலை செய்பவர்கள் தி.மு.க. காரர்களாக இருந்தார்கள். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் திராவிட இயக்கம் இப்படித்தான் புரட்சிகரமான தத்துவத்தால் வளர்ந்தது.
அதன் பிறகு ஊரில் பள்ளிக்கூடம் வந்தது, அங்கு பெருமாள் என்ற பட்டியலினத்தவர் 8வது படித்து டவுணில் சென்று எஸ்.எஸ்.எல்.சி படித்து டீச்சர் ட்ரைனிங் முடித்து அவருக்கு வாத்தியார் வேலை கிடைத்து விட்டது. ஏற்கனவே மில்லிட்டரிகாரர் எங்கள் ஊரில் கலக்கி வருகிறார். இப்போது இவர் வாத்தியார் ஆகிவிட்டார். அவர் சொந்த ஊரில் வேலை வேண்டும் என்று சண்டைபோட்டு வேலையை வாங்கி ஊருக்கு வந்தார். அப்போது எங்கள் ஊர் தலைவர் பள்ளிக்கு வந்ததும் நாற்காலியில் பெருமாள் அமர்ந்துகொண்டார். அதைப் பார்த்த ஊர் தலைவர் பெருமாளின் அப்பாவை அழைத்து, “உன் பையன் வாத்தியார் வேலைக்கு போய்ட்டா... நீங்க, என் முன்னாடி உட்காருவீங்களா? என்று கேட்டார். அதற்கு பெருமாளின் அப்பா, “என் பையன் வாத்தியாருங்க. அதனால உட்காருவாரு” என்றதும், பள்ளியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கூட ஊர் தலைவர் பங்கேற்பதை நிறுத்திவிட்டார். அந்தப் பெருமாள்தான் என்னுடன் படித்தவர் அதை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் கவுண்டமணியை வைத்து ஒண்ணா இருக்க கத்துகணும் என்ற படம் எடுத்தேன்” என்றார்.