கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவைத்தாண்டி உலக அளவில் முதல் ட்ரெண்ட் ஆனது, 'PRAY FOR NESAMANI'. 'பிரண்ட்ஸ்' படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. அது குறித்து திடீரென ஒருவர் ட்விட்டரில் ஒரு கமெண்டை போட, அது மெல்ல வளர்ந்து அன்றிரவே உலக ட்ரெண்டானது. முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள...
ஏற்கனவே வடிவேலுவை மையமாகக் கொண்டு வெளிவரும் மீம்ஸ்கள் உலகளவில் புகழ் பெற்று வர, 'நேசமணி' ட்ரெண்டானதைத் தொடர்ந்து வடிவேலு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவன் குறித்துப் பேசுகையில் 'அந்தப் பையன், அவன்' என்று குறிப்பிட்டதோடு 'இம்சை அரசன்' படத்தில், தான் பல மாற்றங்களை செய்துதான் படம் வெற்றி பெற்றது எனும் அர்த்தத்தில் பேசியிருந்தார். இந்த பேட்டி வெளியானதிலிருந்து பலரும் வடிவேலுவுக்கு கண்டனங்களை பதிவு செய்தனர். சிம்புதேவனின் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் 'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன், வடிவேலுவை கண்டித்து ட்வீட் செய்திருந்தார். இவர் இம்சை அரசன் படத்திலும் பணியாற்றியவர். அவரிடம் இதுகுறித்து பேசிய போது, அவர் தெரிவித்தது...
"வடிவேலு அண்ணனின் வெற்றிகளை பற்றி பேச வேண்டும் என்றால் வெற்றி என்பதற்கு மற்றொரு பெயர் வடிவேலு அண்ணன். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. நான் அதில் சொன்னது என்ன என்றால் புலிகேசியில் அவர் கரெக்ஷன் செய்து எந்த காட்சியும் எடுக்கப்படவில்லை. ஒரு நடிகனாக தன்னை மேருகேற்றி செய்த சில விஷயங்கள் இருக்கிறது. அது ஒரு நடிகன் சினிமாவுக்குக் கொடுக்க வேண்டிய பங்களிப்புதான். நானே அனைத்தையும் செய்து எடுத்தேன் என்று சொன்னால் அடுத்தடுத்து அவர் நடித்த இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தெனாலி ராமன், எலி உள்ளிட்ட படங்களில் வடிவேலு பேச்சை கேட்கும் குழுதான் இருந்ததாக சொல்கிறார்கள். அப்போது அந்தப் படங்களும் புலிகேசியை போல ஹிட் அடித்திருக்க வேண்டுமல்லவா?
ஒரு படம் என்பது கூட்டு முயற்சி. இயக்குனர் என்பவர் கதை ஒன்றை கொண்டு வருகிறார். கேமரா மேன் ஒரு கோணத்தில் வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார். தயாரிப்பாளர் அந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு செலவு செய்யலாம் என நினைக்கிறார். ஒரு நடிகன் 'நான் இந்த மாதிரி நடிக்கிறேன்' என்று நினைத்து நடிப்பார். இப்படி அனைவரின் முயற்சிதான் ஒரு படம். எனக்குத் தெரிந்து 23ஆம் புலிகேசியில் ஸ்கிரிப்டை வைத்துதான் எடுத்திருக்கிறோம். 24ஆம் புலிகேசிக்குக் கூட அவர் சொல்கிறார், 'அந்தப் பையன் ஒரு லைனை வைத்துக்கொண்டுதான் வந்தான்' என்று. இந்த வாசகம் மட்டும்தான் எனக்குப் பிரச்சனை. 'தம்பி வந்தான், வந்து கதை சொன்னான்' என்று சொல்லியிருந்தால் கூட அது வேற விஷயம். 'அந்தப் பையன், அந்த டைரக்டர் வந்தான், ஒரு லைன்தான் கொண்டுவந்தான், நான் தம்பி உட்காருனு சொல்லி கதையை மாற்றினேன்' என்று சொல்கிறார். அந்த தொனியை கவனியுங்கள்... என்னமோ சின்னப் பையனுக்கு டியூஷன் எடுப்பதுபோல சொல்கிறார் வடிவேலு. அந்த அகந்தையை கண்டித்துதான் நான் ட்வீட் செய்திருந்தேன். என்னுடைய இயக்குனரை பற்றி ஒருவர் இப்படி பேசும்போது அதை பார்த்துகொண்டு சும்மாவா இருக்க முடியும்?"