Skip to main content

“இதுவரை எந்த நடிகையும் நடிக்காத கதாபாத்திரம்”- இயக்குனர் நாக் அஸ்வின்... 

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
nag ashwin

 

'பாகுபலி' இந்தியளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து பிரபாஸின் மார்க்கெட் இந்தியா முழுவதும் விரிவடைந்தது. அதைப் பயன்படுத்தி யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'சாஹோ' படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, கடந்த வருடம் வெளியானது. ஆனால், அந்தப் படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை. 


இதனைத் தொடர்ந்து பிரபாஸின் 20ஆவது படத்தையும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. அண்மையில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதனுடன் இப்படத்தின் பெயர் 'ராதே ஷ்யாம்' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கே.கே. ராதா கிருஷ்ணா இயக்குகிறார். 

 

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் பிரபாஸின் 21ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஃபிப்ரவரி மாதம் வெளியானது. தெலுங்கு சினிமாத் துறையில் மிகப் பிரபலமான மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் 50ஆவது ஆண்டாகும். இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தைத் தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மிகப்பெரிய பட்ஜெட்டில் நாக் அஷ்வினை வைத்து படம் இயக்கப்போகிறோம் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

'எவடே சுப்ரமணியம்', 'மஹாநடி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாக் அஸ்வின். இவரது மனைவி ப்ரியங்கா தத் தான் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகள். இவர்கள் தான் 'மஹாநடி' படத்தையும் தயாரித்திருந்தார்.

 

இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. இப்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் தீபிகா ஒப்பந்தம் குறித்து கூறுகையில், “இந்த கதாபாத்திரத்தில் தீபிகாவின் நடிப்பைக் காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். இது வரை எந்த நடிகையும் நடிக்காத ஒரு கதாபாத்திரம் இது. இது அனைவருக்கும் ஒரு ஆச்சரியமாக இருக்கும். தீபிகா மற்றும் பிரபாஸ் ஜோடி படத்துக்கும், கதைக்கும் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு விஷயமாக இது இருக்கும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முத்தக் காட்சி - படக்குழுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Fighter gets legal notice from IAF officer over kissing scene

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான படம் ‘ஃபைட்டர்’. வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் இருவரும் இசையமைத்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம், மோசமான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. 

இதையடுத்து படத்தின் மீதான விமர்சனம் குறித்துப் பேசிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததே கிடையாது. பலர் விமான நிலையத்திற்குக் கூட போனதில்லை. அப்படியிருக்கும் சூழலில் இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்” என்றிருந்தார். இது சர்சைக்குள்ளானது.

இந்த நிலையில் இப்படத்தில் விமானப்படையை அவமதித்து விட்டதாக அசாமைச் சேர்ந்த விமானப் படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தின் இறுதியில் விமானப்படை சீருடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முத்தக் காட்சியில் நடித்து அவமதித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதற்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதேபோல் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த 'பதான்' படத்தில், 'பேஷரம் ரங்' பாடலில் காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இப்படம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

Next Story

2023 ஆஸ்கர் விழாவில் தீபிகா படுகோனே

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Deepika Padukone also presenting 2023 Oscars award function

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா வருகிற 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

இந்த விழாவில் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப் பிரிவிலும் போட்டியிடுகிறது. 

 

இந்த நிலையில் 95வது ஆஸ்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் தீபிகா படுகோனே பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் விழாவை பார்க்க அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சர்வதேச அளவில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் நடிகை தீபிகா படுகோனே பங்கேற்று வருகிறார். கடந்த வருடம் ஆஸ்கருக்கு இணையாக சினிமா பிரபலங்கள் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர்களின் ஒருவராக இருந்தார். உலக கோப்பை கால்பந்து 2020 இறுதி போட்டியில் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது 2023 ஆம் ஆண்டு ஆஸ்கர் விழாவிலும் பங்கேற்கவுள்ளார்.