Skip to main content

விக்ரம் முதல் சச்சின் வரை...! பரவை முனியம்மா, மறக்க முடியுமா?

Published on 29/03/2020 | Edited on 30/03/2020

2003இல் பொங்கல் வெளியீடாக, பொங்கல் தினத்துக்கு சில நாட்கள் முன்னரே வெளியானது 'தூள்'. விக்ரம் - தரணி என்ற 'தில்' கூட்டணி மீண்டும் இணைந்து, அனைத்து சுவைகளும் நிறைந்த முழு கமர்சியல் படமாக உருவாக்கியிருந்தனர். ஆரம்பம் முதல் மின்னல் வேகத்தில் நகரும் படம். சண்டை ஒவ்வொன்றும் அதிரும். அதன் உச்சகட்டமாகப் படத்தின் முக்கியமான இடத்தில், பாட்டி பரவை முனியம்மாவை வில்லன்கள் துரத்த, 'எங்கே கொன்று விடுவார்களோ' என்ற பதைபதைப்புடன் ரசிகர்கள் பார்க்க, ஓடும் பரவை முனியம்மா திடீரென நின்று திரும்பி வருவார். "வாங்கடீ வாங்க... என் சிங்கத்தை கேளுங்கடா" என்று சொல்ல விக்ரம் கம்பீரமாக வந்து ஆக்ரோஷமாக அடிக்க, 'மதுர வீரன்தானே...' என்று பரவை முனியம்மா பாடிய அந்தப் பாடல் திரையரங்குகளில் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அப்போதைய ரசிகர்களின் 'கூஸ்பம்ப் மொமண்ட்'டாக அது அமைந்தது. பரவை முனியம்மாவின் குரலில் அந்தப் பாடலும் அதோடு நடக்கும் சண்டைக்காட்சியும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.
 

paravai muniyamma



'தூள்' படமும் முக்கியமாக அந்தப் பாடலும் பெற்ற வெற்றியில் தமிழகத்தின் செல்லப் பாட்டியானார் முனியம்மா. அதற்கு முன்பே பல ஆண்டுகளாக மதுரை சுற்றுவட்டாரங்களில் அவரது நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் பிரபலம். அவரது கேஸட்டுகளின் விற்பனை அமோகம். திருவிழாக்களில் ஒலித்த அவரது குரல், 'தூள்' மூலம் திரையரங்குகளில் ஒலித்தது. இயக்குனர் தரணி, தன் படங்களில் நாட்டுப்புற பாடகர்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். 'எதிரும் புதிரும்' படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடல் பயங்கர ஹிட். 'தில்' படத்தில் மாணிக்க விநாயகம் பாடிய 'கண்ணுக்குள்ள...' பாடலும் ஹிட். அடுத்ததாக பெருவெற்றியைப் பெற்றது 'பரவை' முனியம்மா 'தூள்' படத்தில் பாடிய 'மதுர வீரன்தானே'. இந்த மூன்று படங்களுக்குமே இசையமைத்தவர் வித்யாசாகர். மாணிக்கவிநாயகம், பரவை முனியம்மா இருவருமே பாடகர்கள் என்பதைத் தாண்டி நடிகர்களாகவும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

 

sachin



'மதுர வீரன்தானே' பாடல் பெற்ற வெற்றி மிகப்பெரியது. ஒவ்வொரு திருமணம், திருவிழா என அந்த ஆண்டு தமிழகத்தின் கொண்டாட்டமாக அந்தப் பாடல் அமைந்தது. அதன் உச்சமாக, 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அதிரடியாக ஆடி கிரிக்கெட் ரசிகர்களைக் குதூகலத்தில் வைத்திருந்த சச்சினின் ஆட்டத்துக்கு ஒரு ட்ரிபியூட்டாக, அவர் ஆடிய வீடியோவுடன் இந்தப் பாடலை இணைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கொண்டாடினர். இப்படி ஒரு பாடலிலேயே மிகப்பெரிய புகழ் பெற்ற பரவை முனியம்மா, பல படங்களில் நடித்தார். பல நாடுகளுக்கும் பயணித்து நிகழ்ச்சிகளில் பாடினார். அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ் என பல முக்கிய நாயகர்களுடன் நடித்துள்ளார். தனது அறுபது வயதுக்கு மேல் இவ்வளவு ஆக்டிவ்வாக இருந்த பரவை முனியம்மா, சில ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவால் அவதிப்பட்டார். வயதின் காரணமாக மறைந்துவிட்டார். ஆனால், இன்று கேட்டாலும் நம்மை தாளம் போடவைக்கிறது 'மதுர  வீரன்தானே' எனப் பாடிய அவரது குரல்.                   

 

                           
 

சார்ந்த செய்திகள்

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.