தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.
இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக திருப்பதியில் படப்பிடிப்பு நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது.
இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த மாதம் வெளியானது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படக்குழு, டைட்டில் லுக் வீடியோவையும் வெளியிட்டது. போஸ்டரில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா என்பவர், தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் ஏற்கனவே குபேரா என்ற தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் தலைப்பை பதிவு செய்த போதிலும் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தனது படத்தின் பெயரை சேகர் கம்முலா பயன்படுத்தியதாகவும், இது குறித்து தெலுங்கானா பிலிம் சேம்பரிடம் பேச முயற்சித்தும் சரியாக பதில் வரவில்லை என்றும் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் சட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினையை தீர்க்க முயல்வதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.