Skip to main content

தடை விதித்த பகுதியில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ் படக்குழு

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

dhanush captain miller shooting issue update

 

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரப் படப்பிடிப்பின் போது ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததாக சொல்லப்பட்டது.

 

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவுக்கு எதிராகப் புகார் மனு கொடுத்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. நேற்று மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எழுப்பிய சத்தம் மற்றும் புகை மூட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

 

இந்த நிலையில் மத்தளம்பாறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து படக்குழு ஒப்புதல் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு பழையபடி மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

“என் அம்மாவின் அன்பு மாதிரி...” - இளையராஜா இசை குறித்து வெற்றிமாறன்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
vetrimaaran speech in ilaiyaraaja biopic event

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எனக்கு ராஜா சார் இசையை எப்போது கேட்டாலும் ஒன்னுதான் தோணும். அது எங்க அம்மாவுடைய அன்பு மாதிரி. நிலையானது. எப்போதுமே மாறாது. வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தாலும் அவரின் இசை ஏற்படுத்துகிற உணர்வு எப்போதுமே அப்படியே தான் இருந்துருக்கு. அவருடன் வேலை பார்ப்பது ரொம்ப இலகுவாக இருக்கும். சமமாக நம்மை நடத்துவார்.

அவர் முதல் படம் பண்ணும்போது எனக்கு ஒரு வயசு. ஆனால் என்னோடு அவர் பேசும்போது, படம் பார்த்துவிட்டு பரிந்துரை சொல்லலாமா எனக் கேட்டார். அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் கேட்டார். அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு இயக்குநரை அவர் வைத்து வேலை பார்ப்பார். அவர் இசையமைப்பதை பார்த்தால், இசையமைப்பது ரொம்ப ஈஸி என தோணும். சிரமமே இல்லாமல் வேலை பார்ப்பார். என்னுடைய பார்வையில் அவர் ஒரு மியூசிஷியன் என்பதை விட மெஜிசியன் தான். அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது நம் நாட்டினுடைய பெரிய ஆவணம்.

அவர் இப்போது வேலை பார்த்து வருகிற வாழ்க்கை, இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால் இருக்கும் 40 வருட வாழ்க்கை, இவ்வளவு காலங்களையும் ஒரு நாட்டினுடைய வரலாற்று பதிவாக அவருடைய இசையில் நாம் சேர்க்க வேண்டும். எல்லாருடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட முறையில் அவருடைய இசை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை படமாக உருவாகும் போது தமிழ் இசை கேட்டு வளர்ந்தவர்கள் அத்தனை பேருடைய படமாக இப்படம் இருக்கும். இந்த படத்தில் ஏதாவது ஒரு விதத்தில் நான் பங்காற்ற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அருணுக்கு இப்படம் ஒரு கிஃப்ட். தனுஷிற்கு மற்றுமொரு சவால். எந்த சவாலை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக தனுஷ் தாண்டி வருவார். இந்த படத்தில் ராஜா சாருடைய இசையை கேட்க ஆர்வமாக இருக்கேன்” என்றார்.