பிரபல கன்னட நடிகர் தர்ஷன் விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் விஜயலட்சுமி தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி தர்ஷன் அவரை விட்டுப் பிரிந்துசென்றார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே சமயம் நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுடன் தர்ஷனுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் செய்து கொள்ளாமல் அவருசன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவந்துள்ளார். பவித்ரா கௌடா ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி, தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனைப் பவித்ரா, தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி கொலை செய்துள்ளார் தர்ஷன். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்ப, இந்த வழக்கு தொடர்பாக தர்ஷன், பவித்ரா கௌடாஉட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் தர்ஷன் உள்ளிட்ட கைதான சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் வீடியோ காலில் இரண்டு நபருடன் தர்ஷன் பேசும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதையடுத்து கர்நாடகா காவல்துறை கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் ரேணுகா சாமியை சித்திரவதை செய்தும் மின்சாரம் செலுத்தப்பட்டும் கொலை செய்திருப்பதாக குறிப்பிட்டு தர்ஷன் பெயரை இரண்டாவது குற்றவாளியாக சேர்ந்திருந்தனர். இதனிடையே தர்ஷன், முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன் கோரி கடந்த மாதம் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அதே கோரிக்கையுடன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது.அப்போது தர்ஷனுக்கு 6 வாரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.