Skip to main content

"அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா, கூகுள் போன்றவர்! - டி. இமான் நெகிழ்சி!

Published on 04/09/2021 | Edited on 06/09/2021
bdbdxxs

 

விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி, சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளரான ஆலயமணி, விழாவிற்கு வருகை தந்தவர்களை நெகழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னதாக மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இமான் பேசியபோது....

 

"'லாபம்' படத்தில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதவை. திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்னரே என்னுடைய இசை சார்ந்த முயற்சிகளுக்கு இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பெரிதும் ஊக்கமளித்தார். பிறகு படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமான பின், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்தேன் அந்த தருணத்தில், என்னையும் ஒரு இசையமைப்பாளராக அங்கீகரித்து, என்னுடைய வீட்டிற்கு இயக்குநர் ஜனநாதன் வருகை தந்தார். அந்தத் தருணத்தில் அவர் ‘இயற்கை’ படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் என்னையும், என் திறமையையும் நம்பி வாய்ப்பளிப்பதற்காக வீடு தேடி வந்த முதல் இயக்குநர் ஜனநாதன் சார்தான் என்பதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதமடைகிறேன்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் ‘லாபம்’ படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பாடல், பாடலுக்கான சூழல், அதற்கான பின்னணி, பாடல் வரிகள், மெட்டு, அதற்கான இசை, இதைக் கடந்து உலக அரசியலைக் குறித்து ஆர்வமுடன் விவரிப்பார். அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா, கூகுள் போன்றவர். இந்தப் படத்தில் ‘சேருவோம் சேருவோம்..’ எனத் தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. இந்தப் பாடலை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழப் பெண் பாடகி கிளியோபாட்ரா என்பவர் பாடியிருக்கிறார். அது ஒரு ராப் இசை பாடல். இந்தப் பாடலில் எர்க்ஹு (Erhu) என்றொரு இசைக்கருவியின் இசை இடம்பெற்றிருக்கும். இது சீன நாட்டைச் சேர்ந்த வயலின் இசைக்கருவி போன்றது. இந்த இசைக்கருவியின் அமைப்பு எப்படி இருக்கும்? எத்தனை தந்திகள் அதில் இருக்கும்? அதனுடைய செயல்பாடு? பயன்பாடு? இதுகுறித்த விவரங்களையெல்லாம் கேட்டறிந்தார். ஏனெனில், இந்தப் படத்தில் நாயகி சுருதிஹாசன் கிளாரா என்ற இசைக் கலைஞராக நடித்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் என்பதால், ஒரு பாடலை தொடங்குவதற்கு முன் உள்ள சூழல், அதாவது எந்த சுருதியில் தொடங்கலாம்? எந்த ராகத்தில் அமையலாம்? எந்த மாதிரி டெம்போவில் அமைக்கலாம்? எந்த மாதிரியான இசைக்கருவிகளைப் பயன்படுத்தலாம்? குழு இசை எப்படி பயன்படுத்தலாம்? என்றொரு விவாதம் நடைபெறும். இதனை இயக்குநர் ஜனநாதன் திரையில் காட்சிப்படுத்த விரும்பினார். 

 

bvdbsbxs

 

இந்தக் காட்சியைப் படமாக்கும்போது மிக நுட்பமாக எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்...? நான் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறேன். இது சரியா..? என விளக்கமாக கேட்டறிந்துகொண்டு படமாக்கினார். இந்தப் பாடல் காட்சியின்போது எர்க்ஹு என்ற இசைக்கருவியை அதே தோற்றத்தில் பயன்படுத்தியிருந்தார். இந்த இசைக்கருவி எப்போது தோன்றியது? அந்தக் காலகட்டத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல்? இதனை யார் பயன்படுத்தினார்கள்? எதற்காக பயன்படுத்தினார்கள்? என்ற விவரங்களை எல்லாம், என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் அவரிடம் பகிர்ந்துகொண்டபோது, அவர் இதனை ஆழ்ந்து கவனமுடன் கேட்டறிந்தார். ஒரு படைப்பை நூறு சதவீதம் நேர்த்தியாக திரையில் உருவாக்கிய படைப்பாளி ஜனநாதன் சார் என சொல்லலாம். பாடல் உருவாக்கத்தின்போதும், மற்றைய தருணங்களிலும், எப்போதும் அவருடன் அவருடைய உதவியாளர் ஆலயமணி உடனிருப்பார். பாடல் வரிகள் உருவாக்கத்தின்போதும், இசைக்கருவிகள் பயன்படுத்தும்போதும் ஆலயமணி அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.

 

அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அனுமதிக்கப்பட்டிருந்த காட்சி எனக்கு உணர்வுரீதியாக இணைந்திருந்தது. அதே மருத்துவமனை, அதே தீவிர சிகிச்சை பிரிவில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சிகிச்சைப் பெற்று, மறைந்ததை நினைவூட்டியது. இது எனக்கு மேலும் மன பாதிப்பை ஏற்படுத்தியது. ஆகச் சிறந்த மனிதர் அவர், இவ்வளவு விரைவாக நம்மிடமிருந்து பிரிந்து சென்றது சொல்ல முடியாத, தாங்க முடியாத இழப்பு. இதனால் மனம் கனக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அவர் ஒரு நடிப்பு அரக்கன் என்று குறிப்பிடலாம். எந்தக் கதாபாத்திரம் அவரிடம் வழங்கப்பட்டாலும், அதனை தன்னுடைய பாணியில் வழங்கி, ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பார். அவருடைய அபார நடிப்புத் திறமைக்கு நானும் ஒரு பரம ரசிகன். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, சிறந்த தயாரிப்பாளரும் கூட. தயாரிப்பாளர் ஆறுமுக குமாருடன் இணைந்து இப்படத்தை நேர்த்தியாக தயாரித்திருக்கிறார். இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்" என்றார்.

 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளி மாணவிக்கு பாடும் வாய்ப்பு - உறுதியளித்த இமான்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

imman promising chance for a schoolgirl to sing in his music

 

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இமான், கைவசம் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில், யோகி பாபுவின் மலை, சமுத்திரக்கனியின் பப்ளிக் உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார். இதனிடையே தன்னுடைய படங்களில் ஆதரவற்ற ஏழை எளிய மற்றும் மாற்றுத் திறானாளி பாடகர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் நன்றாக பாடும் வீடியோக்கள் வைரலானால் அவர்களின் முகவரியை கேட்டு உடனே பாட வாய்ப்பளித்து வருகிறார். 

 

அந்த வகையில் ஒரு பள்ளி மாணவி பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. உடனே அந்த மாணவியின் முகவரியை கேட்டு பதிவிட்டார். இந்த நிலையில் அந்த மாணவியின் குடும்பத்தாரிடம் பேசி வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளார். அம்மாணவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி எனத் தெரியவந்துள்ளது. அவர் 7 ஆம் வகுப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. பின்பு அம்மாணவியின் தந்தையாரிடம் தொலைப்பேசி வாயிலாக அழைத்து மாணவியை பாராட்டி தனது இசையில் பாட வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.    

 

 

 

Next Story

இமான் - சிவா; நடந்தது என்ன? நெருங்கிய நண்பர் வருத்தம்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

D Imman Siva Karhtikeyan issue

 

"நான் மியூசிக் இண்டஸ்ட்ரில 30 வருஷமா இருக்கேன். டி.இமான், அவரோட அப்பா டேவிட், முதல் மனைவி மோனிகா, ரெண்டாவது மனைவி அமலி, அமலியோட முதல் கணவர் பிரசன்னா, அப்புறம் சிவகார்த்திகேயன், இவங்க எல்லாருகூடவும் நெருங்கிப் பழகுறவன். டி.இமான் வீட்ல என்னென்ன நடந்துச்சுன்னு தெரியும். கேரக்டர் விஷயத்துல நான் ரொம்பவும் மரியாதை வச்சிருக்கிற ஒருத்தர பத்தி சோஷியல் மீடியாவுல தவறா பேசுறாங்க. ஆனா.. அவரு ரொம்பவும் கரெக்டா இருக்கிறவரு. அவரை பற்றிய வதந்திய.. ஜஸ்ட் லைக் தட் தூவுறாங்க. பொய்யான ஒரு விஷயத்த இந்த அளவுக்கு பண்ணுறாங்கன்னா.. இவங்கள யாரு இன்ஃப்ளூயன்ஸ் பண்றாங்க? ஒருவேளை இவரோட காம்படீட்டரா இருக்குமோ? சினி ஃபீல்ட்ல என்ன அரசியல் நடக்குது? இந்த கோபம்தான் என்னை உங்ககிட்ட பேசவச்சிருக்கு” என்று நம்மிடம் பேச ஆரம்பித்தவர், “எனக்கு தெரிந்த உண்மைகளை அப்படியே சொல்கிறேன். என்னுடைய பெயரைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

 

தமிழ் இசையுலகில் தனி அடையாளம் உள்ளவர் என்பதாலும், அத்துறையில் நம்பகத்தன்மை மிக்கவர் என்ற நற்பெயருடன் திகழ்வதாலும், அவர் நம்மிடம் பகிர்ந்த தகவல்களை அப்படியே தருகிறோம். “மொதல்ல ஒண்ண தெரிஞ்சிக்கங்க. துரோகம் பண்ணிட்டாருன்னு சிவகார்த்திகேயனை சொல்லுற தகுதி இமானுக்கு இல்ல. எது துரோகம்? நான் எந்த பெண் பின்னாலயும் போனது கிடையாது. எந்த பெண்கிட்டயும் உடல்ரீதியான தொடர்பு வச்சிக்கிட்டது இல்ல. என்னை செக்ஸ் சாட்டிங் பண்ணுன்னு சொன்னவங்க இருக்காங்கன்னு இமானே உளறிருக்காரு. பெண்கள் செக்ஸ் சாட் பண்ண கூப்பிட்டாங்கன்னா.. அவங்களுக்கு உன்னோட வீக்னஸ் தெரிஞ்சிருக்குன்னுதான அர்த்தம்? இதுதான மனைவி மோனிகாவுக்கு இமான் பண்ணுன துரோகம்?

 

இமானோட அப்பா டேவிட் ஆசிரியர் பணில இருந்தவரு. தங்கமான மனுஷன். ஆனா.. இமான் அப்படி கிடையாது. சின்ன வயசுல இருந்தே ஜீசஸ் என்கிட்ட பேசுவாருன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. இமான் பேச்ச கேட்டா ரொம்ப நல்லவரு மாதிரியே தெரியும். பொதுவெளில ரொம்ப உருக்கமா பேசி நல்லவரா காட்டிக்குவாரு. இமானோட ஆன்மிக சிந்தனையும் பேச்சும் அபாரமா இருக்கும். ஆனா.. அவரோட கேரக்டர் எப்படின்னு இண்டஸ்ட்ரில உள்ளவங்களுக்கு தெரியும். எல்லா ஃபீல்ட்லயும் இருக்கிற மாதிரிதான் மியூசிக் ஃபீல்ட்லயும் பாலியல் அப்ரோச் உண்டு. பெரிய சிங்கர்ஸ்கிட்ட வழியுறதோட நிப்பாட்டிருவாங்க. ஒரு ஃபேமஸ் லேடி சிங்கரோட ஸாங் ரெகார்டிங். அவங்க ரொம்ப அழகா இருப்பாங்க. அந்த நேரத்துல இமான் விட்ட ஜொள்ளு இண்டஸ்ட்ரி முழுக்க பிரசித்தம். மனசுக்குள்ள ஆசை இருந்தாலும் அதுக்கு மேல அந்த ஃபேமஸ் லேடி சிங்கர்கிட்ட மூவ் பண்ணமுடியாது. அதனால.. கோரஸ் பண்ணுறவங்கள டார்கெட் பண்ணுவாங்க. அந்தமாதிரி ரெண்டு மூணுபேர்கிட்ட இமான் பழக்கம் வச்சிருந்தாரு.

 

இமான் மாதிரி ஆளுங்க.. யதார்த்தமா கடலை போடற பெண்கள்கிட்ட செக்ஸ் சாட்டிங் பண்ணுறது, ரிகர்ஸல்னு கூப்பிடறது, பிரைவேட் டைம்ல கூட்டிட்டுப்போயி பாடவைக்கிறது, ரெகார்டிங் ரூம்ல ஜாலியா பேசிக்கிட்டே இன்டராக்ட் பண்ணுறதுன்னு சகலமும் நடத்திருவாங்க. லேடீஸ்ல இங்கே ஃபயரா இருக்கவங்களும் இருக்காங்க. வீக்கா இருக்கவங்களும் இருக்காங்க. வெளியூர் ஷோ.. மற்ற ஷோக்களுக்கு போனா பேமெண்ட் நெறய கிடைக்கும்னு போவாங்க. சில விஷயங்களுக்கு ஒத்துப்போவாங்க. இதெல்லாம் சரிவராதுன்னு நினைக்கிறவங்க, கச்சேரில மட்டும் பாடுவாங்க. ரெகார்டிங் பக்கமே போகமாட்டாங்க. அந்த பெண்ணோட பேரையோ, இமானுக்கும் அவருக்கும் இப்ப இருக்கிற உறவையோ நான் குறிப்பிட விரும்பல. இமான்கூட கடலை போட்டுத்தான் பழக்கத்த ஆரம்பிச்சாங்க. பசையுள்ள இடத்துல ஒட்டிக்கிறது அந்த பெண்ணோட பாலிஸி. இது எனக்கு எப்படி தெரியும்னா எங்க டீம்ல அந்த பொண்ணு பாடிட்டு இருந்துச்சு.

 

D Imman Siva Karhtikeyan issue

 

இந்த இடத்துல சில நல்ல விஷயங்களயும் சொல்லணும். இமானோட அப்பா ஸ்கூல் டீச்சரா இருந்ததுனால ரொம்பவும் டிசிப்ளினா இருப்பாரு. முதல் மனைவி மோனிகாவுக்கும் இமானுக்கும் பிரச்சனை வந்தப்ப, அவங்கள பிரியவிடாம தன்னோட பிடியில வச்சிருந்தாரு. இமான் இசையில் நல்ல ஞானஸ்தன். அருமையான கீ போர்ட் பிளேயர். இதுல மாற்றுக் கருத்தே இல்ல. இவ்வளவு திறமை இருந்தும் ஏன் ஃபீல்ட்-அவுட் ஆகுறாரு? எதுல டைவர்ட் ஆனாரு? பிரச்சனை இங்கதான் ஆரம்பமாச்சு.

 

மனைவி நான் இருக்கும்போது பிற பெண்களோட எதுக்கு செக்ஸ்-சாட்டிங் பண்ணனும்கிற கோபம் மோனிகாவுக்கு. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், சண்டை போட்டும், இமான் திருந்தல. மகனோட லைஃப் கெட்டுறக்கூடாதுன்னு இமானோட அப்பா மோனிகாகிட்ட மன்றாடிப் பார்த்தாரு. மோனிகா ரொம்ப தெளிவான பொண்ணு. டேவிட் முழுக்க முழுக்க ஒரு அப்பாவா இமான் பக்கம் நின்னது மோனிகாவுக்கு சுத்தமா பிடிக்கல. குடும்பம்னு பார்க்காம இமானோட அப்பா, மகனுக்கு முட்டுக்கொடுத்ததுல ரொம்ப கோபமாயிட்டாங்க. என் மகன் இப்ப பீக்ல இருக்கான்.. ஃபீல்ட்ல அவனுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.. அதை கெடுத்துறாத. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சேர்ந்து வாழறதுதான் சரியா இருக்கும்னு காம்ப்ரமைஸ் பண்ணுனதுல டென்ஷன் ஆயிட்டாங்க.

 

புருஷனோட பலவீனமும், துரோகமும், அதுக்கு மாமனார் சப்போர்ட் பண்ணுனதும் மோனிகாவ தூங்கவிடல. ஒரு ஸ்டேஜ்ல மோனிகா, தன்னோட ஏஜ் குரூப்ல இருக்கவங்ககிட்ட தன்னோட மனவேதனையை ஷேர் பண்ண ஆரம்பிச்சாங்க. மனைவியும் ரெண்டு பெண் குழந்தைகளும் இருக்கும்போது.. மன வக்கிரமோ, உடல் சுகமோ, அதை பிற பெண்கள்கிட்ட தேடுற கணவனை பார்த்தாலே ஆத்திரம் வரும்ல. நிம்மதியை கெடுத்துட்டு இமானோட வாழுற வாழ்க்கை நரகம்னு புலம்புனாங்க. இந்த சிச்சுவேஷன்ல.. இமானை அண்ணனாவும், தன்னை அண்ணியாவும் மதிக்கிற சிவகார்த்திகேயன்கிட்ட பிரச்சனைய சொல்லிருக்காங்க. மாமனார்கிட்ட விவரிக்கமுடியாத மன உளைச்சலை சிவாகிட்ட கொட்டிருக்காங்க. ஏன்னா.. மனம் கொத்திப் பறவைல இருந்தே இமான்கூட டிராவல் ஆயிட்டுவர்ற சிவா, அடிக்கடி வீட்டுக்கு வந்துபோறவரு. மோனிகா சொன்ன பிரச்சனைய இமான்கிட்ட பேசிப் பார்த்தாரு சிவா. சரிவராதுன்னு உறுதியா தெரிஞ்சபிறகு, அண்ணன் மாறமாட்டாரு.. பிரியணும்; டைவர்ஸ் பண்ணனும்னு நீங்க முடிவெடுத்துட்டா.. உங்களுக்கு எது சரின்னு தோணுதோ, அதை பண்ணிருங்கன்னு சொல்லிட்டாரு.

 

தனக்கெதிரா மோனிகா தொடர்ந்து பிரச்சனைய கிளப்பும்போது சிவா தன்பக்கம் நிக்கலைங்கிற கோபம் இமானுக்கு. அதைத்தான் துரோகம்னு சொல்லுறாரு போல. சோசியல் மீடியாவுல இந்த அளவுக்கு பேசிட்டாரு இமான். அதுக்கு கண்ணு காது மூக்கு வச்சு ஆளாளுக்கு பேசுறாங்க. என்ன நடந்துச்சுன்னு தெளிவா இமானே சொல்லிருக்க வேண்டியதுதான? ஏன் சொல்லல? டைவர்ஸ் வாங்கி கிட்டத்தட்ட மூணு வருஷமாச்சு. அப்பா நல்லவரா இருந்திருந்தா பெண் குழந்தைங்க அவர்கிட்ட பேசிருக்கணும்ல. ஏன் பேசலன்னா. அப்பாவோட கெட்ட நடவடிக்கை எல்லாம் பிள்ளைங்களுக்கு தெரிஞ்சிருக்கு. வீட்ல நடந்த சண்டைய குழந்தைங்க கவனிக்காமலா இருப்பாங்க? அதான்.. அப்பாவ சுத்தமா வெறுத்து ஒதுக்கிட்டாங்க. அம்மா மோனிகா பக்கம் ஸ்ட்ராங்கா இருக்காங்க.

 

மனசாட்சி உறுத்துனதுனால இமான் எப்படிப்பட்டவர்ங்கிறத எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சொல்லிருக்கேன். சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர்ங்கிறதயும் சொல்லணும். நான் முதன்முதலா கீர்த்தி சுரேஷை பார்க்கும்போது அவர் தங்கியிருந்தது சிவகார்த்திகேயன் வீடு. கீர்த்திசுரேஷ் அம்மா மேனகாவும் நடிகைதான். சிவாவோட நல்ல குணத்தை தெரிஞ்சுதான், கீர்த்திசுரேஷ் சினிமாவுல அறிமுகமான கால கட்டத்துல, சிவாவோட வீட்ல தங்கவச்சாங்க. அப்பல்லாம் சிவா மனைவி ஆர்த்தியும், கீர்த்தி சுரேஷும் ஒண்ணாவே இருப்பாங்க. இப்ப சினிமா இண்டஸ்ட்ரில பெண்கள் விஷயத்துல நேர்மையாவும் ஒழுக்கமாவும் இருக்கிறவங்க பட்டியல்ல எப்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு நல்ல பேரு இருக்கோ, அதே அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கும் நல்ல பேரு இருக்கு. கீர்த்திசுரேஷை அவங்க அம்மா மேனகா, சிவா வீட்ல தங்கவச்சது அப்படி ஒரு நம்பிக்கைலதான். அப்பா இறந்தபிறகு, அக்கா வளர்ப்புல வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். வக்கிர புத்தியோ, கீழ்த்தரமான எண்ணமோ அவரு ரத்தத்துலயே இல்ல. சினிமாவுல இருந்தாலும் மது, சிகரெட்னு எந்த கெட்ட பழக்கமும் சிவாகிட்ட இல்ல.

 

தனுஷ், அனிருத் எல்லாம் சிவகார்த்திகேயன் நண்பர்கள்தான? அவங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும் எங்கேயாவது வாய விட்ருப்பாரா? இமானுக்கும் சிவகார்த்திகேயனோட கேரக்டர் நல்லா தெரியும். தன்னைப் பற்றிய அந்தரங்க ரகசியங்களை எந்தச் சூழ்நிலையிலும் பிரஸ்மீட் வச்சு சொல்ல மாட்டார்னு தெரிஞ்சுதான், துரோகம்கிற பழியை தூக்கி போட்டிருக்காரு. சிவா ஒரு சத்புத்ரன். யாராலோபட்ட கோடிக்கணக்கான கடன் சிவா தலைல விழுந்துச்சு. இப்பவரைக்கும் அடைச்சிட்டிருக்காரு. சிவாவுக்கு பொண்டாட்டி, ஃப்ரண்ட் எல்லாமே ஆர்த்திதான். இப்படி ஒரு மனைவி அமைஞ்சது சிவாவுக்கு கடவுள் கொடுத்த வரம். இமான் என்னமும் சொல்லிட்டுப் போகட்டும். மனைவி ஆர்த்தியும், க்ளோஸ் சர்க்கிள்ல இருக்கிற ஃப்ரண்ட்ஸும் நம்புறாங்கள்ல, சிவாவுக்கு அது போதும்.

 

இமானுக்கு சொல்லிக்கிற மாதிரி இப்ப படங்கள் இல்ல. பெரிய டைரக்டர்கள் யாரும் மதிக்கிறது இல்ல. அயலான் ப்ரமோஷனை கெடுக்கிறதுக்கான சதித் திட்டமா இருக்கலாம். இமானுக்கு பின்னால யார் யாரு இருக்காங்கன்னு தெரியல. துரோகம், அழுகை, உருக்கமான பேட்டி எல்லாம் அனுதாபத்தை தேடித்தந்து, பழைய நிலைக்கு தன்னை உயர்த்தும்கிற தப்பான எண்ணமாக்கூட இருக்கலாம். ஏதோ ஒரு சூழ்ச்சி வலையைப் பின்னி அதுக்குள்ள அவரே மாட்டிக்கிட்டாரு. போகப்போக காலம் இதை இமானுக்கு உணர்த்தும்” என்றார் குமுறலுடன்.

 

சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டதாக நீங்க சொல்றீங்க. திரையுலகில் உங்களுடைய குற்றம் குறைகளை அடுக்குகிறார்கள். சிவகார்த்திகேயன் என்ன துரோகம் செய்தார்? இவ்வளவு தூரம் வந்தபிறகு உண்மையை உடைத்து தெளிவான விளக்கம் தருவதுதானே சரியாக இருக்கும்?’ என்பது போன்ற கேள்விகளுடன் இசையமைப்பாளர் டி.இமானை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அணுக முடியாதவராகவே இருந்தார். சிவகார்த்திகேயனின் துரோகம் குறித்தும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் டி.இமான் விளக்கம் அளிப்பதற்கு முன்வந்தால், வெளியிட தயாராகவே இருக்கிறோம்.